தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் ரோட்டில் இருபுறமும் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. இந்த ரோட்டில் அம்பலச்சேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு ஏதோ மிகப்பெரிய கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைய உள்ளதாக அப்பகுதியில் பரவலாக பேசப்படுகிறது.
இந்நிலையில், அவ்வப்போது இந்த இடத்திற்கு பலரும் வருகை தந்து பார்த்துவிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, அப்பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகள் சமீபகாலமாக விறுவிறுப்பாக நடந்து வந்ததாக தெரிகிறது. தகரங்களைக் கொண்டு பார்ப்பதற்கு தற்காலிக கொட்டகைகள் போலவும் ஆங்காங்கே அமைக்கப்பட்டதாக தெரிய வருகிறது.
இதற்கிடையே, நேற்று (டிச.15) தாழ்வாக பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று, திடீரென அப்பகுதியில் தரையிறங்கியது. இதையடுத்து வானில் சுழன்று அடித்தபடி வந்த ஹெலிகாப்டரின் சத்தம் கேட்ட அப்பகுதி பொதுமக்கள், ஹெலிகாப்டரை நோக்கி வந்தனர்.
அப்போது, ஹெலிகாப்டரில் இருந்தவர்களை கீழே இறங்கி நடக்கவிடாமல் இருக்க காருடன் காத்திருந்த சிலர், ஹெலிகாப்டரில் இருந்த அடையாளம் தெரியாத நபர்களை பத்திரமாக அங்கிருந்த கொட்டகைக்கு அழைத்துச் சென்றனர். சுமார் ஒருமணி நேரம் கூட நீடிக்காமல் அங்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அந்நபர்களை, மீண்டும் பத்திரமாக அங்கிருந்தவர்கள் அதே காரில் அழைத்துக் கொண்டுபோய் ஹெலிகாப்டரில் விட்டநிலையில், அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.
இதற்கிடையே, அங்கு நமது இந்தியா மற்றும் அமெரிக்கா நாட்டின் தேசியக் கொடிகளும் சுழன்று அடித்த ஹெலிகாப்டரின் இறக்கைகள் எழுப்பிய காற்றில் வேகமாக பறந்து கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரிடம் இது தொடர்பாக விசாரித்தபோது, ‘தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் அமைய இருக்கும் ராக்கெட் ஏவுதளம் மற்றும் அனல் மின் நிலையம் ஆகியவற்றிற்கு கனரக இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளதாகவும், அதற்கான பூமி பூஜை நேற்று நடந்ததாகவும் தெரிவித்தார்.
இந்த தொழிற்சாலை கட்டுவதற்காக அந்த பகுதியில் சுமார் 2,000 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர். தொழிற்சாலைக்கான கட்டுமானப் பணிகளை நாக்பூரை தலையிடமாகக் கொண்டு இயங்கி வரும் புகழ்பெற்ற கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் ஒன்று கட்டுவதாக உள்ள நிலையில், அதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்வதற்காக பிரபல தொழிலதிபர் ஒருவர் ஹெலிகாப்டரில் வந்ததாகவும் கூறினர். அவரின் பாதுகாப்பு கருதியே, இது குறித்த தகவல்களை வெளியே விடாமல், பூமி பூஜை பணிகள் ரகசியமாக வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
திசையன்விளை பகுதியில் உள்ள விஜயநாராயணம் கடற்படை தளத்திற்கு அடிக்கடி ஹெலிகாப்டர்கள் வந்து செல்வதாக அப்பகுதியினர் கூறிவரும் நிலையில், சாத்தான்குளம் அருகே அம்பலச்சேரியில் ஹெலிகாப்டர் தரையிறங்கிய சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில் வந்து இறங்கிய ஹெலிகாப்டரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைத் தொடர்ந்து, கிராமத்தில் அதுவும் காட்டுக்குள் திடீரென ஹெலிகாப்டர் இறங்கிய சம்பவம், அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சாத்தான்குளம் பகுதியில் மட்டுமில்லாது தமிழ்நாடெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையடுத்து, அம்பலச்சேரி பகுதியில் அனுமதியின்றி ஹெலிகாப்டர் தரையிறங்கியதாக அப்பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே, ஏதோ மிகப்பெரிய கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைய உள்ளதாகவும், குலசேகரன்பட்டினத்தில் இந்தியாவின் இரண்டாவது இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்திற்காக இந்த பகுதியில் பல தொழில் நிறுவனங்கள்புதிதாக அமைய உள்ளதாகவும் கூறப்படும் நிலையில், அத்தொழிற்சாலைகளின் நிறுவனங்களில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை.. மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை!