கரோனா தடுப்பு ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத்திற்குப் புத்துயிர் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு உணவு உற்பத்திக்கு அடிப்படையான விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு விலக்களித்துள்ளது. இருப்பினும், உற்பத்தி செய்த விளைப்பொருள்களு0க்கு விலை நிர்ணயம் செய்வதிலும், கொள்முதல் செய்வதிலும் ஏற்பட்டுள்ள சிக்கல் விவசாயிகளைப் பெரும் கவலையடையச் செய்துள்ளது.
குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் வடகால் பாசனத்தால் செழித்திருக்கும் திருவைகுண்டத்தின் குலையன்கரிசல் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 40 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தில் பயிரிடப்பட்டிருக்கின்ற வாழைகள் தேக்கமடைந்துள்ளன. தூத்துக்குடியிலிருந்து நாளொன்றுக்கு 60 முதல் 70 லாரிகளில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த வாழைத்தார்கள், தற்போது போக்குவரத்து வசதியில்லாததால் வீணாகக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம், வாழைக் குலைகள் வெட்டப்படாமல் மரத்திலேயே தங்கியிருப்பதால் அரைகுறையாய் பழுத்து, அழுகி போயுள்ளன. இதனால் ஏலம் விடுவதற்கே பயனற்றதாகியுள்ளது. இவ்வாறு ஒதுக்கப்படும் வாழைக்குலைகளை உள்ளூர்ச் சந்தைகளில் கூட ஏலம் எடுப்பதற்கு வியாபாரிகள் முன்வர மறுக்கிறார்கள். அப்படியே விற்பனைக்கு எடுத்துச் சென்றாலும் போக்குவரத்து செலவு, வாடகை, கூலி என எல்லாம் போக வாழைக்குலைகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.
விவசாய விளைப்பொருள்கள் வீணாகாமல் பாதுகாக்க அரசு உணவு பதப்படுத்தும் கிடங்குகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும், தினந்தோறும் டன் கணக்கில் வெட்டப்படும் வாழைக்குலைகளைச் சேமித்து வைப்பதற்கு போதுமான அளவு கிடங்குகளில் இடம் இருப்பதில்லை. மேலும், வாழைக்கு இன்சூரன்ஸ் தொகை அளிக்கப்படும் என அறிவித்தும், அது தற்போது வரை கிடைக்கவில்லை என தங்களது வேதனைகளை நம்மிடம் பகிர்கிறார்கள்.
இதுகுறித்து ஈ.டிவி பாரத்திடம் பேசிய குலையன்கரிசலை சேர்ந்த விவசாயி ஆஸ்கர், "பொதுவாக இந்தக் காலகட்டத்தில் கோயில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இப்போது பூவன் வாழைப்பழத்திற்கான சீசன். ஆனால், தூத்துக்குடியில் இருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கும் பூவன் பழம் ஏற்றுமதி செய்வது தடைபட்டுள்ளது. விளைபொருள்களைச் சேமிக்க அரசு உணவு பதப்படுத்தும் கிடங்கை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், கிடங்கில் வாழைக்குலைகளைச் சேமித்து வைப்பதற்கு போதுமான அளவு இடம் இருப்பதில்லை. எனவே, விவசாயிகளின் வாழ்வைக் காப்பாற்றுவதற்கு பயனுள்ள வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மற்றொரு விவசாயியான சுரேஷ் கூறுகையில், "வாழைப் பயிர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை என்பதும் தற்போது வரை கிடைக்கவில்லை. விவசாயிகள் நாட்டின் முதுகெலும்புகள் என்று சொல்லும் அரசுகள், அவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. வாழை விவசாயிகளைப் பற்றிய கவலையும் இல்லை, கருணையும் இல்லை என்ற நோக்கில் மத்திய, மாநில அரசுகள் செயல்படுவதாய் தோன்றுகிறது. விவசாயத்தையும், விவசாயிகளையும் வாழ வைப்பதற்கு இப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனில், இனி எப்போதும் எழுந்திருக்க முடியாத நிலைக்கு நாங்கள் சென்றிடுவோம்" என்றார்.
வாழை விவசாயிகளின் மனக்குமுறல்களுக்கு, தூத்துக்குடி மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் சரஸ்வதி என்ன பதில் தரப்போகிறார் என எதிர்பார்த்து அவரைத் தொடர்பு கொண்டபோது, "தூத்துக்குடி மாவட்டத்தில் வாழைப் பயிர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்குவது அரசு காட்டிய வழிமுறைகளின்படி மேற்கொள்ளப்படுகிறது. வாழை மகசூல் இழப்பினை பொருத்தே இன்சுரன்ஸ் தொகையானது திருப்பி அளிக்கப்படுகிறது.
மகசூல் இழப்பினைக் கணக்கிடும் பணியில் தோட்டக்கலைத் துறை, புள்ளிவிவர கணக்கியல் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தொய்வு ஏற்பட்டுள்ள இன்சூரன்ஸ் தொகை அளிக்கும் பணிகள், நிலைமை சீரானதும் மீண்டும் விரைவாக நடைபெறும். வெட்டப்படும் வாழைகளை அரசு பதப்படுத்தும் கிடங்கில் இலவசமாகப் பாதுகாப்பில் வைத்துக் கொள்வதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருங்காலத்தில் சேமிப்பு அளவை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.
பொருளாதார ரீதியில் பெரும் இன்னலுக்குள்ளாகி, நிற்கும் வாழை விவசாயிகளின் துயரைப் போக்க விளைந்த வாழைக்குலைகளை அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என்பதே வாழை விவசாயிகளின் வேண்டுகோளாக உள்ளது.
இதையும் படிங்க : வாழ்வாதாரம் இழந்து நிற்கும் முந்திரி விவசாயிகள் - கைக்கொடுக்குமா தமிழ்நாடு அரசு?