தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கனிமொழி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விளாத்திகுளம் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னை தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு வழங்க உள்ளோம். அதேபோல், அனைத்து இடங்களிலுமே தண்ணீர் பிரச்னை உள்ளது. இதற்கு அரசு நிரந்தர நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. குடிநீருக்காக திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
அந்தத் திட்டங்களை நிறைவேற்றினால் தண்ணீர் பிரச்னை பெரும் அளவுக்கு குறைந்துவிடும். அதிமுகவை என்றுமே நாங்கள் திராவிட இயக்கமாக ஏற்றுக்கொண்டதில்லை. அவர்கள் திராவிட இயக்கத்தின் எந்த கருத்துக்களிலும் நம்பிக்கை இல்லாமல்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.