தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராகத் தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து, 72 மாணவ, மாணவிகளுக்கு இலவச மரக்கன்றுகளை வழங்கியதோடு, பள்ளி வளாகத்தில் அதனை நட்டும்வைத்தார். இதையடுத்து, 69 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜலெட்சுமி பேசியதாவது:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்காகப் பல்வேறு நலத்திட்டங்களைத் தந்தார். அதேபோன்று மாணவ, மாணவிகளுக்காகவும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினார். குறிப்பாக, பெண் குழந்தைகள், பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காகவும், பொருளாதாரத்தினை மேம்படுத்தவும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.
அவர் பெண்ணாக இருந்த காரணத்தினால்தான் பெண்களின் சிரமங்களை உணர்ந்து, அவற்றைக் களைய திட்டங்களை வழங்கினார். ஆகையால், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முதலமைச்சர் பழனிசாமி, நேற்று ’மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு' தினமாக அறிவித்து அரசாணை வெளியிட்டார். இது மறைந்த முதலைமைச்சர் ஜெயலலிதாவிற்கு நாங்கள் செய்த நன்றிக்கடன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து இளையரசனேந்தலில் அதிமுக சார்பில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் அமைச்சர் ராஜலெட்சுமி கலந்துகொண்டார்.
இதையடுத்து, அவரது திருவுருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செய்து, அதிமுக கட்சிக்கொடியை ஏற்றி வைத்ததோடு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதையும் படிங்க: 'எல்லாம் இருந்தாலும் ஆரோக்கியம்தான் நம் சொத்து' - கனிமொழி எம்.பி.