கரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகள் கீழ் விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் தூத்துக்குடி, சென்னை இடையிலான விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது. சென்னையிலிருந்து வந்த இண்டிகோ விமானம் பகல் 12.40 மணி அளவில் தூத்துக்குடி வந்தடைந்தது. இதில் வந்த பயணிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மாவட்ட சுகாதாரத் துறையினர் சார்பில் பயணிகளுக்கு கபசுரக் குடிநீர் பொடியை அலுவலர்கள் வழங்கினர்.
மேலும் 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்தி இருக்கக்கோரி கைகளில் அழியாத மையை பயன்படுத்தி சீலிட்டு அனுப்பினர். இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கூடுதல் ஆட்சியர் விஷ்ணு சந்திரன், விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஆட்சியர், “ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் சுமார் 60 நாள்களுக்குப் பின்னர் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமான சேவை தொடங்கியுள்ளது. விமானம் மூலம் தூத்துக்குடி வந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு அறிகுறி உள்ள நபர்கள் தனிமைபடுத்தப்படுவர். தற்போது மாவட்டத்தில் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்கள் எண்ணிக்கை உயரவில்லை. 117 நபர்கள் மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதில் பெரும்பாலும் மகாராஷ்டிரா, குஜராத் பகுதியிலிருந்து சொந்த ஊர் திரும்பிய நபர்களுக்குத்தான் கரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்” என்று கூறினார்.
அதேசமயம் விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன் கூறுகையில், “சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 42 பயணிகள் வந்து சேர்ந்துள்ளனர். தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 58 நபர்கள் பயணம் செய்கின்றனர். பயணிகள் அனைவரும் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை சோதனைகள் செய்யப்பட்ட பின்பே அனுமதிக்கப்படுகின்றனர். தற்சமயம் மே 31ஆம் தேதி வரை ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே விமான போக்குவரத்து நடைபெறும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் விமானப் பயண திட்டமானது மாறுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.
சென்னையிலிருந்து தூத்துக்குடி வந்த பயணி சுமதி என்பவர் கூறுகையில், “மாநில அரசு விதிமுறைகளின்படி விமானத்தில் வந்த பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. 14 நாள்கள் வீட்டுத் தனிமையில் இருப்பதற்காக அழியாத மை கொண்டு கைகளில் சீலிடுகின்றனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது” என்று கூறினார்.
இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் தூக்கிட்டுத் தற்கொலை