தூத்துக்குடி: மீனவர்களுக்கு மானிய விலையில் மீன்பிடி இயந்திரங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் சிங்கிதுறை, அமலிநகர், ஆலந்தலை மீனவர் கிராம பகுதியில் மீன்வளம் - மீனவர் நலத்துறையின் சார்பில் பாரம்பரிய நாட்டு படகுகளுக்கு மானிய விலையில் வெளிப்பொருத்தும் இயந்திரங்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் மீன்வளம் - மீனவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு மொத்தம் 25 நபர்களுக்கு மானிய விலையிலான இயந்திரங்களை வழங்கினார்.
மீனவர்கள் கடலுக்கு சென்று காணாமல் போனால், ஏழு ஆண்டுகளுக்கு பிறகுதான் அவரது குடும்பத்திற்கு ஏதாவது அரசு இழப்பீடுகள் கிடைக்கும் என்பதை மாற்றி உள்ளுர் கூட்டுறவு அமைப்புகள் உத்திரவாதத்துடன் மூன்று மாத காலத்திலேயே இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரங்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அமலிநகர் மீனவர் கிராம பகுதியில் 43 கோடி ரூபாய் மதிப்பிலும், சிங்கிதுறை, கொம்புதுறை மீனவர் கிராமங்களில் 28 கோடி ரூபாய் மதிப்பிலும், இனிகோ நகர் மீனவர் கிராம பகுதியில் 3.50 கோடி ரூபாய் மதிப்பிலும், விவேகானந்தர் மீனவர் காலணி பகுதியில் 2.70 கோடி ரூபாய் மதிப்பிலும் கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளுக்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
தனியாருக்குச் சொந்தமான குவாரியில் அலுவலர்கள் ஆய்வு: வாகனங்கள் பறிமுதல்!