மத்திய அரசு தொழில்வளத்தை அதிகரிக்கும் விதமாகவும், பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும் புதிய சூழலியல் தாக்க மதிப்பீட்டு திட்ட வரைவை கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தை அமல்படுத்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் பல்வேறு இயக்கத்தினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதனடிப்படையில், மத்திய அரசின் புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை கைவிட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 22 மீனவ சங்க பிரதிநிதிகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஆகஸ்ட் 17) மனு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீனவ அமைப்பை சேர்ந்த ஃபாத்திமா பாபு கூறுகையில்,
"மத்திய அரசின் இந்த சட்ட திருத்தத்தால் மீனவர்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளன. அது மட்டுமல்லாமல் கடலில் 12 நாட்டிக்கல் தொலைவிற்கு அப்பால் மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை யாரும் கேள்வி கேட்க முடியாத சூழல் உருவாகும். அதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு கடலுக்குள் காலடியே எடுத்து வைக்க முடியாது. எனவே, வரைவு நிலையில் உள்ள இந்த சுற்றுச்சூழல் திருத்த மசோதாவை கைவிட வேண்டும். இல்லையென்றால் மீனவர்கள் சட்ட ரீதியாக போராட்டங்கள் நடத்துவோம்" என்றார்.