மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரண உதவித்தொகை வழங்கப்படவில்லை என தூத்துக்குடி மீனவர்கள் சார்பில் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டதன் பின் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண உதவித்தொகை வழங்குவதற்கு அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மீன்பிடி தடைக்கால நிவாரண உதவித் தொகையை பெற மீனவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளதற்கு தூத்துக்குடி மாவட்ட திரேஸ்புரம் பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நாட்டுப்படகு மீனவர் சங்க நிர்வாகி இசக்கிமுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண உதவித் தொகை வழங்குவதற்கு அரசு ஆவண செய்துள்ளது. தடைக்கால நிவாரண உதவித் தொகையை பெறுவதற்கு மீனவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மட்டும் சுமார் 30 ஆயிரம் மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அது இயலாத காரியம். கிராமத்தில் வாழும் மீனவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பது மிகவும் கடினம். அதேபோல் மீனவர்களுக்கு மாணிய விலையில் டீசல் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.