தூத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திஸ்டன் (25). சங்குக் குளிக்கும் மீனவரான இவர் இன்று காலை ஆறு மணிக்கு சக மீனவர்களுடன் பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில், சங்கு எடுப்பதற்காக ஆழ்கடல் பகுதிக்கு சென்றுள்ளார். ஆழ்கடலில் சந்திஸ்டன் உள்பட மேலும் இரண்டு பேர் சங்குகுளித்துக் கொண்டிருந்த போது அவ்வழியாக தாமஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு வந்துள்ளது.
அந்த விசைப்படகில் வந்த மீனவர்கள் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்ததாகத் தெரிகிறது. அந்த வலையில் சந்திஸ்டன் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் சந்திஸ்டனை காப்பாற்றுவதற்காக கூக்குரலிட்டனர். ஆனால் இதை விசைப்படகு மீனவர்கள் கண்டுகொள்ளாமல் இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து விசைப்படகை மீனவர்கள் விரட்டிச் சென்று பிடித்து வலையை அறுத்தெறிந்து விட்டு பார்த்தபோது அவர் ஆழ்கடலில் மூழ்கியது தெரியவந்தது.
பின்னர் கரை திரும்பிய நாட்டுப்படகு மீனவர்கள் இது குறித்து கடலோரக் காவல்படையினருக்கும், வடபாகம் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் கடலில் மூழ்கிய சங்குக்குளிக்கும் மீனவர் சந்திஸ்டனை தேடும் பணியில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், இதுதொடர்பாக மீனவர்களுக்குள் பிரச்னை ஏற்படாமல் இருக்க திரேஸ்புரம், மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.