திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கிராமம் ஒன்றில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்கள் குடும்பமாக வசிக்கின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்தைச் சேர்ந்த சின்னத்துரை சுகந்தி என்ற தம்பதிக்கு 18 வயது நிரம்பாத இரண்டு மகன்கள் உள்ளனர்.
சின்னதுரை கொத்தனார் ஆகவும் அவரது மனைவி சுகந்தி தனியார் ஓட்டலில் ஊழியராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் சின்னத்துரை, சுகந்தி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். இவர்களது இளைய மகன் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் நிலையில் நேற்று மாணவன் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
காரின் வேகத்தை கண்டித்த சிறுவன்: அப்போது மதியம் சுமார் 2 மணி அளவில் சின்னதுரையின் இளைய மகன் மெயின் ரோட்டில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த நபர்கள் சிலர் காரில் வேகமாக சென்றுள்ளனர். இதை பார்த்த சின்னத்துரையின் இளைய மகன் அந்த காரை வழிமறித்து ஏன் இப்படி வேகமாக செல்கிறீர்கள் ஊருக்குள் மெதுவாக செல்லுங்கள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
வீடுபுகுந்து சிறுவனை தாக்கிய நபர்கள்: இதனால் ஆத்திரமடைந்து காரில் இருந்த நபர்கள் அங்கிருந்து சிறுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதோடு அந்த சம்பவம் முடிவு பெற்ற நிலையில் சின்னத்துரையின் இளைய மகன் மாலை 3 மணியளவில் தனது வீட்டில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த போது ஊரின் பின்பக்க வழியாக திடீரென பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் கையில் அரிவாள், பீர் பாட்டில் போன்ற ஆயுதங்களுடன் சின்னத்துரையின் வீட்டுக்குள் புகுந்து சின்னதுரையின் இளைய மகனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும் வீட்டுக்குள் இருந்த காற்றாடி மற்றும் கண்ணாடி உளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். கும்பல் தன்னை தாக்குவதை அறிந்து, பதற்றம் அடைந்த சிறுவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அங்கும் இங்கும் ஓடியுள்ள நிலையில் அந்த கும்பல் வீட்டின் அனைத்து அறைகளுக்கும் சென்று சிறுவனை துரத்தி துரத்தி தாக்கியுள்ளனர்.இந்நிலையில் சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள ரத்தினம் என்பவரது மகன் ஓடி வந்து வீட்டிற்குள் பார்த்துள்ளார். அப்போது சிறுவன் மயக்கம் அடைந்த நிலையில் அக்கும்பல் அங்கிருந்து கிளம்பி சென்றதாக கூறப்படுகிறது.
காப்பாற்றிய பக்கத்து வீட்டு நபர்: பின்னர் ரத்தினத்தின் மகன் சிறுவனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இதை கவனித்த கும்பல் மீண்டும் திரும்பி வந்து ரத்தனத்தின் வீட்டையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். கதவை திறக்கும்படி ரத்தினத்தின் வீட்டு கதவை அறிவாளால் கொத்தி உள்ளனர். இதில் அவரது கதவும் சேதம் அடைந்துள்ளது. பின்னர் ரத்தனத்தின் மருமகன் சின்னதுரையின் மகனை பாதுகாப்பாக வீட்டுக்குள் அடைத்து விட்டதால் கும்பலால் உள்ளே செல்ல முடியவில்லை. இதையடுத்து அங்கிருந்து கும்பல் கிளம்பி சென்றுள்ளது.
இதையும் படிங்க: சாட்சி அளிப்பவரின் சாதி, மத அடையாளம் குறிப்பிடப்படுவதை தவிர்க்ககோரி மனு...நவம்பர் 21ஆம் தேதி வழக்கு ஒத்திவைப்பு!
மேலும் இந்த சம்பவத்தின் போது தாக்கியவர்கள் நாங்கள் குறிப்பிட்ட சாதியை சார்ந்தவர்கள் உங்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என கூறி கொண்டே தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது அந்த சிறுவனுக்கு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாளையங்கோட்டை தாலுகா காவல்துறையினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஊர் மக்கள் போராட்டம்: முதல் கட்ட விசாரணையாக சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. சிறுவன் தாக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில் சின்னதுரை குடியிருக்கும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அனைவரையும் சமாதானப்படுத்த முயன்றதை அடுத்து மக்கள் அமைதியான முறையில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கூறுகையில், “எங்களுக்கும் அவர்களுக்கும் தற்போது எந்த முன்பகையும் கிடையாது. கடந்த 2014ஆம் ஆண்டு பேருந்தில் செல்வதில் தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு எந்த பகையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். தற்போது காரில் வேகமாக சென்றதை தட்டி கேட்ட ஒரே காரணத்திற்காக சிறுவன் என்று கூட பார்க்காமல் வீடு புகுந்து இதுபோன்று தாக்கியுள்ளனர்.
தனி பேருந்து வேண்டும்: எங்களால் எப்படி இங்கு வாழ முடியும் எங்களுக்கு பயமாக இருக்கிறது. சமூகத்தின் பெயரை குறிப்பிட்டு தாக்கியுள்ளனர். போலீசார் எங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும். எங்களுக்கு இரண்டு தனி பேருந்துகள் இயக்க வேண்டும். ஊர் எல்லையில் சோதனை சாவடி அமைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த தேவிகா கூறும்போது, “நான் வயக்காட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென இருசக்கர வாகனங்களில் கையில் பீர் பாட்டிலுடன் வந்தார்கள். உங்களுக்கு எந்த ஊரு என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அவரகளது சமூகத்தின் பெயரை கூறிவிட்டு, தகாத வார்த்தையில் பேசி விட்டு சின்னத்துரை வீட்டுக்குள் புகுந்தனர். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தேன் பின்னர் உயிருக்கு பயந்து நான் வீட்டுக்குள் ஓடி விட்டேன்”.
தொடரும் சாதிய மோதல்கள்: ஏற்கனவே கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரியைச் சேர்ந்த சின்னத்துரை என்ற மாணவனை சாதிய வன்மத்தோடு சக மாணவர்கள் வீடு புகுந்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் அதேபோன்று ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவி வருகிறது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்