சென்னை : பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான நிவாரணத்தை பெற ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை உள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
சுற்றுலா செல்வதாகக் கூறி 13 லட்சத்து 66 ஆயிரத்து 725 ரூபாயை வசூலித்து ஏமாற்றியதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த ஜெயசிங் வசந்த், ரஞ்சித் ஆகிய இருவருக்கு எதிராக வேலூரைச் சேர்ந்த மனோகர் தாஸ் என்பவர் கடந்த 2020ம் ஆண்டு கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தனது புகார் மீது முதல் அறிக்கை மட்டுமே பதிவு செய்யப்பட்டதாகவும், அதன் பிறகு எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை எனக்கூறி கடந்த 2022ம் ஆண்டு மனோகர் தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
விசாரணையின் போது இரண்டு மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி, நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மனோகர் தாஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, கடந்த 2022ம் ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ம் தேதியில் இருந்து இன்று வரை கோயம்பேடு காவல் நிலையத்தில் பணியில் இருந்த நான்கு துணை ஆணையர்கள், மூன்று உதவி ஆணையர்கள் மற்றும் ஆறு ஆய்வாளர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று( நவ 5) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 11 காவல் துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகியிருந்தனர்.
இதையும் படிங்க : வழக்கு விசாரணையின்போது விஐபிகளுடன் கூடுதல் வழக்கறிஞர்கள் ஆஜராகலாமா? உயர் நீதிமன்ற உத்தரவு இதுதான்!
காவல் துறை தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, மருத்துவ விடுப்பில் உள்ள இரண்டு அதிகாரிகளை தவிர மற்ற அதிகாரிகள் ஆஜராகி உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்திற்குள் அமல்படுத்தும் வகையில் வழிகாட்டி நெறிமுறைகளை உருவாக்க உள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இதுபோல் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான நிவாரணத்தை பெற ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை உள்ளதாக வேதனை தெரிவித்தார்.
அதிகாரிகளை தண்டிக்கும் நோக்கம் நீதிமன்றத்திற்கு இல்லை. அவர்கள் தவறை உணர வேண்டும் எனக் கூறினார். இதனையடுத்து, காவல்துறை தயாரிக்க உள்ள வழிகாட்டு நெறிமுறையின் வரைவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது குறித்த காரணங்களை விளக்கி காவல்துறை மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
பின்னர், விசாரணையை நவம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் கோயம்பேடு காவல் நிலையத்தில் தற்போது பணியில் இருக்கும் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். மற்ற அதிகாரிகள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்தும் உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்