சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு ஊழல் முறைகேடுகள் நடப்பதாக கூறி அவற்றை கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர். எனவே பல்கலைக்கழக துணை வேந்தரை ஆளுநர் திரும்ப பெற வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
போராட்டம் தொடர்பாக பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “சேலம் பெரியார் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் ஆட்சிக் குழு உறுப்பினர் பதவி கடந்த 9ம் தேதியுடன் காலாவதி ஆகி விட்டது.
காலாவதியான பதிவி காலம்: அதேபோல் இணை மற்றும் பேராசிரியர் ஆட்சிக் குழுவும் காலாவதி ஆகி விட்ட நிலையில் பேராசிரியர் ஆட்சிக் குழு உறுப்பினர்களை இன்னும் துணை வேந்தர் வைத்திருப்பது கண்டனத்திற்கு உரியது. தற்பொழுது உதவிப் பேராசிரியர் ஆட்சிக் குழு உறுப்பினர் ஆக உயிர் வேதியியல் துறையைச் சேர்ந்த கிருஷ்ணவேணியை துணை வேந்தர் நியமித்து உள்ளார்.
இதையும் படிங்க: "தமிழர்கள்-தெலுங்கர்கள் இடையே ஒற்றுமையை குலைக்கும் நடிகை கஸ்தூரி"-தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி பேட்டி
பல்கலைக்கழக சாசன விதிகள் கடைபிடிக்கவில்லை: இது பல்கலைக்கழக சாசன விதிகளுக்கு புறம்பானது. சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். இதை ஆட்சிக் குழு உறுப்பினர்கள் ஏற்கக் கூடாது. பணிமூப்பின் அடிப்படையில் ஆட்சிக் குழு உறுப்பினர் பதவி வழங்க வேண்டும். அவ்வாறு விதிமுறையைக் கடைபிடிக்காமல் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை பல்கலைக் கழக சாசன விதிகளுக்கு முற்றிலும் எதிரானது. சட்டத்திற்கு புறம்பானது.
நிர்வாகிகள் மீது நடவடிக்கை தேவை: இதை ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அனைவரும் நிராகரிக்க வேண்டும். தமிழக அரசு சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட பதிவாளர் விஸ்வநாதமூர்த்தி மீது துறை ரீதியிலான விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும். மேலும் விதிமீறலுக்கு காரணமான துணை வேந்தர் ஜெகனாதனை உடனடியாக ஆளுநர் திரும்ப பெற வேண்டும்” என குறிப்பிட்டிருந்தனர். தொடர்ந்து தமிழக அரசையும் பல்கலைக்கழக சாசன விதியையும் மதிக்காத துணை வேந்தரை ஆளுநர் திரும்ப பெற வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்