கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மாதத்தின், முதல் 5 நாள்கள் நடை திறப்பது வழக்கம். இந்த நாள்களில் பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவருவது பல ஆண்டுகளாகத் தொடர்ந்தும் வருகிறது.
அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பும், பறவைக் காய்ச்சலும் வேகமாகப் பரவிவரும் சூழலில் அதனைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு இறங்கியிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வெளிநாடுகள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என தேவசம் போர்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதனால் விரதம் இருந்து கோயிலுக்குச் செல்ல நினைத்த பக்தர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இருமுடி செலுத்த பயணத்தைத் தொடங்கியிருந்த சென்னை, மதுரை, சிவகாசி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் செய்வதறியமால், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் நான்கு வழிச்சாலை ஐயப்பன் கோயிலில் இருமுடி தாங்கி 18 படி ஏறி சரண கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
தேவசம் போர்டின் அறிவிப்பால் சபரிமலைக்குச் செல்ல முடியாத நிலையில் கோவில்பட்டிக்கு வந்து இருமுடிகளை இறக்கி விரதத்தினை முடித்ததாகப் பக்தர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : குமரியில் 10 ரூபாய்க்கு சிக்கன் 65 - கொரோனா வதந்திக்கு முற்றுப்புள்ளி!