தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலைக்கு எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெறுகிறது. இதன் இறுதிக்கட்ட பணிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் குலையன்கரிசல், பொட்டல்காடு, உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தற்போது நடைபெற்று வருகிறது. குலையன்கரிசல் விவசாயிகள் ஆரம்பம் முதலே எரிவாயு குழாய் பதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதுதொடர்பாக முத்தையாபுரம் காவல் நிலையத்தில் பல்வேறு புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி துணை ஆட்சியர் தலைமையில் ஐஓசிஎல் நிறுவன அலுவலர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே கூட்டம் நடத்தப்பட்டு விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, விவசாயிகளுக்கு மூன்று மடங்கு இழப்பீடு பணம் தர வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட ஐஓசிஎல் நிறுவனம், எரிவாயு குழாய் பதிக்கும் பணியை தொடர்ந்து வந்தனர். ஆனால், பேசியபடி விவசாயிகளுக்கு ஐஓசிஎல் நிறுவனம் உரிய இழப்பீடு தொகையை தரவில்லை எனக் கூறப்படுகிறது. நிலத்திற்கு இழப்பீடு பெறாத 15 விவசாயிகள் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் ஐஓசிஎல் நிறுவனத்தினர் இன்று(ஆக.21) கனரக வாகனங்களுடன் விவசாய நிலங்களில் குழாய் பதிக்கும் பணிகளை செய்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விவசாயிகள், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது எப்படி குழாயைப் பதிக்கலாம் எனக் கேள்வி கேட்டனர். இதற்கு ஐஓசிஎல் அலுவலர்கள் ரவுடிகளை வைத்து விவசாயிகளை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, குலையன்கரிசல் விவசாயிகள் சம்பந்தப்பட்ட அலுவலரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டம் செய்த விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். நீதிமன்றம் உத்தரவு வந்த பின்னரே குழாய் பதிக்கும் பணி நடைபெறும் என உறுதியளித்த பின்னர், விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது பெற்ற மாரியப்பன் பிரத்யேக பேட்டி!