தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறையடுத்த அய்யனார் ஊத்தைச் சேர்ந்த பரமசிவன் மகன் அண்ணாமலை (40), விவசாயி. இவரது உறவினர் உடையார். அண்ணாமலை தனக்குச் சொந்தமான தென்னந் தோப்பில் தனது குடும்பத்தினருடன் தேங்காய் பறித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த உடையாரும் தேங்காய் பறிக்க முயற்சித்துள்ளார். இதனால், அண்ணாமலைக்கும் அவரது உறவினர் உடையாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதனையடுத்து, அண்ணாமலை அவரது மகள் முத்துலட்சுமியுடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த உடையாரும் அவரது நண்பர் கோதண்டராமனும் தென்னந்தோப்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக சண்டையிட்டு அண்ணாமலையை சராமரியாக அரிவாளால் தாக்கினர். ரத்த வெள்ளத்தில் மிதந்த அண்ணாமலை சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார்.
மேலும், அண்ணாமலையை அரிவாளால் வெட்ட வந்தபோது அதனைத் தடுக்க முயன்ற முத்துலட்சுமிக்கும் காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சடலைத்தைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேங்காய் பறித்த தகராறில் விவசாயி அண்ணாமலையை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய இருவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.