தூத்துக்குடி: கடந்த சில நாள்களாக தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளான பொன் சுப்பையா நகர், டி. சவேரியார் புரம், மாப்பிள்ளையூரணி மற்றும் டேவிஸ்புரம் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் வீடு புகுந்து தங்க நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருள்கள் அடையாளம் தெரியாத நபரால் கொள்ளையடிக்கப்பட்டது.
இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், தாளமுத்துநகர் காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில் தாளமுத்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
தனிப்படையினர் சம்பவ இடங்கள் மற்றும் அருகில் உள்ள சி.சி.டி.வி பதிவுகளின் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் அடையாளம் காணப்பட்டார். தற்போது தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விவேகானந்தர் நகர் பகுதியில் வசித்து வரும் அந்நபரைக் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரிடமிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 19 சவரன் தங்க நகைகளை தனிப்படையினர் கைப்பற்றினர்.
அதில், அந்த நபர் வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த சாந்தகுமார் மகன் அப்பு (எ) அப்பன்ராஜ் (29) என்பதும், இவர் மீது சென்னை மாங்காடு, நசரத்பேட்டை, திருமுல்லைவாயில், ஆர்.கே. நகர், அரக்கோணம், அரக்கோணம் டவுண், செங்கல்பட்டு மற்றும் தூத்துக்குடி தாளமுத்துநகர் என பல்வேறு காவல் நிலையங்களில் 47 திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இந்தக் கொள்ளையனை விரைந்து கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க:பேய் ஆட்சியை ஒழித்துவிட்டு பிசாசு கையில் ஆட்சியைக் கொடுத்துவிடாதீர்கள் - டிடிவி பேச்சு