இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து ஏராளமான மக்கள் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். இலங்கையில் நடைபெற்று வரும் வன்முறையைப் பயன்படுத்தி அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொலை குற்றவாளிகள் மற்றும் கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களில் சுமார் 50 பேர் சிறையில் இருந்து தப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், மத்திய உள்துறை அமைச்சகம் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் தமிழக கடலோர பாதுகாப்பு படையினர் இன்று (மே13) தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குற்றவாளிகள் அகதிகள் போல் தமிழகத்தில் ஊடுருவாமல் தடுக்க தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கடற்கரை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ரோந்து கப்பல் மற்றும் படகு மூலம் போலீசார் கடலோரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள வான் தீவு, முயல் தீவு, நல்ல தண்ணி தீவு ஆகிய பகுதிகளில் இலங்கை சிறையிலிருந்து தப்பி வருபவர்கள் மறைந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் இந்த தீவு பகுதிகளில் போலீசார் திடீர் சோதனையும் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இலங்கைக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் நிவாரணப்பொருட்களை வழங்க 4 ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் அடங்கிய குழு அமைப்பு!