இந்திய பெருந்துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் வழியாக உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அந்நிய செலாவணியை ஈர்ப்பதில் கடல் வணிகம் பெரும்பங்கு வகிக்கிறது. கடந்த 2019-20 ஆம் ஆண்டில் 1447 கப்பல்கள் மூலம் 8.03 லட்சம் சரக்கு பெட்டகங்கள் (Freight) கையாளப்பட்டன.
கடல் வழி வணிகம்
கடந்த 2019-20 ஆண்டில் மத்திய கப்பல்துறை அமைச்சகம் நிர்ணயித்த 36 மில்லியன் டன் சரக்கை கையாண்டு உள்ளது. தூத்துக்குடி துறைமுகம் வழியாக திருப்பூர், ஈரோடு ஆயத்த ஆடைகள், கோயம்புத்தூரில் இருந்து ஐரோப்பா நாடுகளுக்கு கார்களுக்கு பொருத்தப்படும் செயின், கரூர் விரிப்புகள், கேரளாவில் இருந்து பதப்படுத்தப்பட்ட முந்திரி பருப்புகள், தேங்காய் நார் விரிப்புகள், கடல் உணவுகள் என பல்வேறு உள்நாட்டு உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா, ரஷ்யா, சீனா, துபாய், அரபு நாடுகள், இலங்கை என உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் கடல் வாணிபம் நடைபெற்று வருகிறது.
கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு ஏற்றுமதி மட்டுமின்றி இறக்குமதியும் வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்தியாவில் தற்போது கரோனா தொற்று பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில் இந்திய பொருளாதாரம் மெல்ல மெல்ல மீளத்தொடங்கியுள்ளது. கடந்த கரோனா காலங்களில் இந்தியாவில் துறைமுக பணிகள் நிறுத்தப்படவில்லை என்றாலும் இறக்குமதி செய்யப்பட்ட தளவாடங்கள் கொண்டு செல்வதில் பல்வேறு தாமதங்கள் ஏற்பட்டதால் துறைமுகத்தில் இறக்குமதி சரக்கு பெட்டகங்கள் அதிகமாக தேங்கின.
இதனிடையே, சரக்கு பெட்டக நிறுவனங்கள் சீனாவை நோக்கி நகரத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய துறைமுகங்களில் சரக்கு பெட்டகத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. கரோனா நெருக்கடியிலும் மெதுவாக உயரத்தொடங்கிய ஏற்றுமதி, சரக்கு பெட்டக வாடகை உயர்வால் நிலைகுலையும் நிலைமை உள்ளதாக வணிகர்கள் கூறுகின்றனர்.
சரக்கு பெட்டக வாடகை உயர்வு
ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட அனைத்து ஏற்றுமதி நிறுவனங்களும் (FCL) முழு கொள்ளளவு சரக்குகளை ஏற்றுமதி செய்து வருகின்றன. கரோனா காலத்திற்கு பின்னர் மூச்சு விடத்தொடங்கிய கடல் வாணிபத்திற்கு போதிய சரக்கு பெட்டகங்கள் கிடைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பெட்டகத்திற்கு 1800 அமெரிக்க டாலர்கள் வாடகை பெற்று வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து சுமார் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை வாடகையை உயர்த்தி சரக்கு பெட்டக நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் தற்போது 5 ஆயிரம் டாலர் வரை சரக்கு பெட்டகங்களுக்கு வாடகை செலுத்த வேண்டியுள்ளது.
இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். சரக்கு பெட்டக நிறுவனங்கள் உத்தரவாதம் என்ற பெயரில் சரக்கு பெட்டக கட்டணத்தை உயர்த்தியுள்ளன. அமெரிக்கா மட்டுமல்ல ஐரோப்பா நாடுகளுக்கும் வாடகை அதிகரித்துள்ளது. இலங்கைக்கும் சுமார் 500 முதல் 600 டாலர்கள் வரை வாடகை உயர்த்தப்பட்டு உள்ளதாக கூறுகின்றனர், சரக்கு ஏற்றுமதி செய்யும் முகவர்கள்.
தற்போதைய நிலையில் அதிகரித்து உள்ள சரக்கு பெட்டக கட்டணத்தால் ஏற்றுமதியாளர்கள் முழு கொள்ளளவு ஏற்றுமதி (FCL) என்ற நிலையை கைவிடும் சூழலுக்கு தள்ளப்பட்டு குறைந்த கொள்ளளவு ஏற்றுமதி (LCL) செய்யும் நிலைக்கு வரும் நிலை உள்ளதாக கூறுகின்றனர். இந்திய பொருளாதாரத்தை இது மேலும் பாதிக்கும் என ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: அதிக அளவிலான சரக்கு பெட்டகங்கள்: தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை!