மாநில அரசின் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து மீனவர்களுக்கு 100 விழுக்காடு மானியத்துடன் செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.
இதில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு மீனவர்களுக்குச் செயற்கைக்கோள் தொலைத்தொடர்புக் கருவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியின், இடையே தருவைகுளம் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் மகாராஜன் என்பவர், "மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் இது நாள் வரையில் ஏன் நடத்தப்படவில்லை" என ஆவேசமாகச் சத்தமிட்டார். அவரின், இத்தகைய பேச்சினை கண்டித்து அமைச்சரின் ஆதரவாளர்களும் பதிலுக்குச் சத்தமிட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அசம்பாவிதங்களைத் தடுக்கும் பொருட்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆட்சியர் சந்தீப் நந்தூரி, சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் நிகழ்ச்சியினை பாதியிலேயே முடித்துக் கொண்டு அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை இணை இயக்குநர் சந்திரா, உதவி இயக்குநர்கள் மேரி பிரின்சி வைஸ்லா, பாலசரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.