தூத்துக்குடி: 2001 - 2006ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக, 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 14.05.2001 முதல் 31.03.2006 வரையிலான காலகட்டத்தில் அனிதா மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கப்பட்ட ரூ.6.50 கோடி மதிப்புள்ள 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
இந்த வழக்கை தூத்துக்குடி முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வம் விசாரணை நடத்தி வரும் நிலையில், வழக்கில் தங்களையும் மனுதாரராக இணைக்கக் கோரி அமலாக்கத் துறை, கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணையானது, 80 விழுக்காடு முடிவடைந்துள்ளதால், இதில் அமலாக்கத் துறையை சேர்த்துக் கொள்ள முடியாது என லஞ்ச ஒழிப்புத் துறையினர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அமலாக்கத் துறையின் மனு மீதான விசாரணை தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம் முன்னிலையில் இன்று (அக்.11) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி வழக்கிலிருந்து விலக்கு வாங்கியுள்ளனர். மேலும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பினரும், யாரும் ஆஜராகாத நிலையில் அனிதா தரப்பு வழக்கறிஞர் மட்டும் ஆஜராகி இருந்தார். அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் ரமேஷ் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
காலை 11 மணியளவில் மாவட்ட நீதிபதி செல்வம் அமலாக்கத்துறை தரப்பு வாதத்தை எடுத்துரைக்க அனுமதி அளித்தார். இதையைடுத்து அமலாக்கத்துறை வழக்கறிஞர் இந்த வழக்கில் தங்களை ஒரு தரப்பாக இணைக்க வேண்டும் என்று தனது வாதத்தை எடுத்துரைத்தனர். அப்போது நீதிபதி செல்வம் மதியம் நீதிமன்றம் கூடும் என்று வழக்கை தள்ளி வைத்தார்.
இந்த நிலையில், மதியம் நீதிபதி முன்பு வழக்கறிஞர்கள் ஆஜராகினார்கள். அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களை ஒரு தரப்பாக இணைக்க நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும். தங்களிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சுமார் 60 கோடி ரூபாய் அளவு சொத்து குவித்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை முறையாக விசாரணை நடத்தவில்லை என அமலாக்கத்துறை வழக்கறிஞர் ரமேஷ் வாதம் செய்தார். பின்னர், இதனைக் கேட்ட நீதிபதி செல்வம், வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: லதா ரஜினிகாந்த் எதிரான மோசடி வழக்கு - உச்ச நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!