தூத்துக்குடி: பல அற்புதமான அதிசயிக்கத்தக்க அருட்கொடைகளை அள்ளித் தந்துள்ளது இயற்கை. அதில், தேன் ஒரு ஆகச் சிறந்த மருத்துவ குணம் கொண்டது. சுத்தமான தேனில் 70 வகையான வைட்டமின் சத்துகள் நிறைந்துள்ளன. இயற்கையாகவே தேனில் எண்ணற்ற சத்துகள் நிறைந்துள்ளன. குறிப்பாக மலைகளில் உள்ள மரங்களிலிருந்து எடுக்கப்படும் தேனில் மூலிகை மருத்துவ குணம் உள்ளது.
இதில் நாவல் தேன்,வேம்புத் தேன்,கொம்புத் தேன், மலைத்தேன், பல மலர்த்தேன் எனப் பல்வேறு வகைககள் உண்டு. அந்த வகையில் சந்தையில் புது வரவாய் தேன் உற்பத்தியில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது 'முருங்கை மலர்த்தேன்'.
முருங்கை மலர்த் தேன்
இந்த முருங்கை மலர்தேனை சந்தைப்படுத்தி வருகிறார் பி.ஏ. பொருளியல் பட்டப்படிப்பை முடித்த ஆனந்த் என்பவர். தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயியான இவர் "மதுரம் இயற்கைத் தேன் பண்ணை" என்ற பெயரில் முருங்கைத் தேன் உற்பத்தி செய்துவருகிறார்.
இவர் கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் முருங்கை தோட்டங்களில் தேனீ பெட்டிகளை வைத்து முருங்கைத் தேன் உற்பத்தியில் ஈடுபட்டுவருகிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை சாதாரண மனிதனாக சாயர்புரத்தில் வாழ்க்கையின் எதிர்காலத்தை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியவருக்கு நண்பர் ஒருவரது ஆலோசனையின்பேரில் இயற்கைத் தேன் வாங்கி விற்பனை செய்யும் வியாபாரியாக தனக்கு அடையாளமிட்டுக்கொண்டார்.
சிறிது காலத்திலேயே தன் அறிமுகத்தை விரிவுபடுத்த முடிவுசெய்த ஆனந்த், தேனீ வளர்ப்பு குறித்து கோயம்புத்தூர் இயற்கை வேளாண் கல்லூரியில் ஒரு வார கால பயிற்சி முடித்துக்கொண்டு, நேரடியாகத் தேனைச் சந்தைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தேன் உற்பத்தியில் சாதித்துக் காட்டிய ஆனந்த்
இதற்காகக் கன்னியாகுமரியைச் சேர்ந்த தேன் உற்பத்தியாளர் ஒருவரிடம் ஒரு மாதம் சம்பளம் எதுவும் இல்லாமல் உதவியாளராக மட்டும் பணியில் சேர்ந்து தேனீ வளர்ப்பு குறித்து அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து சாயர்புரத்தில் உள்ள முருங்கைத் தோடட்டங்களில் வெறும் 10 தேனீ பெட்டிகளுடன் களத்தில் இறங்கியவர் இன்று ஏரல், திருச்செந்தூர், சோனங்காட்டு விளை, உடன்குடி, ஆறுமுகநேரி, சாத்தான்குளம், ஆரோக்கியபுரம் உள்பட அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் முருங்கைத் தோட்டங்களில் 1400 தேனீ பெட்டிகள் மூலமாக ஏழாயிரம் கிலோ அளவுக்கு முருங்கைத் தேன் உற்பத்தி செய்து சாதித்துக் காட்டியுள்ளார் ஆனந்த்.
முருங்கை சீசன் காலங்களான ஜனவரி முதல் மார்ச் வரை, ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலும் மட்டுமே தொழில்செய்து பல லட்சக்கணக்கில் லாபம் பார்க்கும் ஆனந்தின் தொழில் சூத்திரம் குறித்துக் கேட்டோம். சாதனை கலந்த கர்வத்துடன் கட்டுடைத்தார் இயற்கை தேன் விவசாயி.
முருங்கை மலர்த் தேன் நன்மைகள்
”முருங்கை இயல்பாகவே மனிதனுக்கு நல்ல மருத்துவ குணமிக்க உணவுப் பொருளாகப் பயன்படுகிறது. முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் கீரை, காய், பூ உள்ளிட்டவை உடலுக்கு இரும்புச்சத்தைத் தருவதுடன் சுவாசப் பிரச்சினை, கல்லீரல் பிரச்சினை, கர்ப்பப்பை நோய், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட குறைபாடுகளுக்கும் நல்ல தீர்வை அளிக்கும் மருந்தாக விளங்குகிறது.
எனவே முருங்கைத் தோட்டத்தில் தேனீ பெட்டிகளை வைத்து உற்பத்தி செய்யப்படும் முருங்கைத் தேனிலும் அதே சத்தை பிரதிபலிக்கும் அனைத்து அம்சங்களும் உள்ளன. இந்த கரோனா காலத்தில் முருங்கைத் தேன் உடலுக்கு நல்ல எதிர்ப்புச் சக்தி தரும் சத்துப் பொருளாகும்.
தினமும் முருங்கைத் தேனுடன் இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிடும்போது உடலில் தேவையான எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. சந்தையில் முருங்கைத் தேனுக்கு உள்ள வரவேற்பினால் நாளுக்கு நாள் அதன் தேவையும் இரட்டிப்பாகிவருகிறது. தற்பொழுது நிலவிவரும் கரோனா ஊரடங்கு காரணமாகத் தேன் உற்பத்தியிலும், விற்பனையிலும் தேன் உற்பத்தியாளர்கள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளோம்.
தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி
முருங்கைத் தோட்டத்தில் தேனீப் பெட்டிகள் வைப்பதன் மூலமாக விவசாயிகளுக்கு விளைச்சலும் 30 விழுக்காடு அதிகரிக்கிறது. ஏனெனில் தேனீக்கள் தேன் எடுப்பதற்காக ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவுக்குச் செல்லும்போது இயற்கையாகவே மகரந்தச் சேர்க்கை ஏற்படுகிறது. மகரந்தச் சேர்க்கையின் காரணமாக மரத்தில் பூ பூப்பது அதிகரிப்பதுடன் நல்ல விளைச்சலும் கிடைக்கிறது.
இதனால் சுமாராக 1000 கிலோ முருங்கைக் காய் உற்பத்தி கிடைக்கும் தோட்டத்தில் தேனீ பெட்டிகள் வைப்பதன் மூலம் 1300 கிலோ வரையிலும் உற்பத்தி கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் நல்ல லாபம் ஈட்ட முடிவதால் தோட்டங்களில் தனி மலர்த் தேனீ வளர்ப்புக்கு விவசாயிகளிடம் தடை ஏதும் இருப்பதில்லை. தற்போது சந்தை நிலவரப்படி முருங்கைத் தேன் ஒரு கிலோ 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பார்க்கக்கூடிய தொழில்களில் இதுவும் ஒன்று. கலப்படமற்ற இயற்கை தேன் உற்பத்திக்கு இருக்கும் வரவேற்பு பல இளைஞர்களிடமும் தேனீக்கள் வளர்ப்பை ஊக்குவித்துள்ளது. அவ்வாறு தேனீக்கள் வளர்ப்பதில் ஆர்வமுடைய இளைஞர்களுக்குத் தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சிகளையும் வழங்கிவருகிறேன்.
புவிசார் குறியீடு வழங்க கோரிக்கை
இந்தத் தொழிலை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்குத் தேனீ வளர்ப்பு பற்றி பயிற்சி அளிப்பதன் மூலம் இதைக் கிராமப்புற பெண்களுக்குக் கொண்டுசென்று அவர்களைத் தொழில்முனைவோர்களாக மாற்றலாம்.
இதனால் அரசுக்கு வருமானம் இரட்டிப்பாகும். தமிழ்நாட்டில் தேனீ வளர்ப்போர் நலவாரியத்தில் கடந்த சில ஆண்டுகளாகப் புதிதாகத் தேனீ வளர்ப்போர் யாரையும் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளவில்லை. இதனால் தேனீ வளர்ப்போருக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய நல உதவிகள், மானியங்கள் உள்ளிட்டவை கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே தமிழ்நாடு அரசு தேனீ வளர்ப்போர் நலவாரியத்தில் தேனீ வளர்ப்பில் ஈடுபடும் அனைவரையும் உறுப்பினராகச் சேர்ப்பதற்கு ஆவன செய்து வியாபார வாய்ப்பை பெருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முருங்கைத் தேனுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கினால் நமது தயாரிப்பை உலக அளவில் எடுத்துச் செல்வதற்கு உதவிகரமாக இருக்கும்” எனக் கூறி முடித்தார் ஆனந்த்.
இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் ஆனந்த்
தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் முருங்கைத் தேன் கேரளா, ஆந்திரா மாநிலங்களுக்கும், கர்நாடகாவில் பெங்களூரு உள்ளிட்ட குறிப்பிட்ட சில நகரங்களுக்கும் அனுப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு முருங்கை மலர்த்தேன் பிரித்தனுப்பப்படுகிறது.
கரோனாவால் வேலையிழந்த இளைஞர்கள் பலரும் எந்த வழியில் கரைசேர்வது எனத் தத்தளிக்கும் இந்நேரம் ஆனந்த் போன்றதொரு இளைஞர்களை எடுத்துக்காட்டாய் பார்த்தால் நாளைய பாரதம் நம் இளைய தொழில்முனைவோர் கைகளுக்குள்ளே அடங்குவது சாத்தியம்.
முருங்கைத் தேன் உற்பத்தியாளர் ஆனந்த் குறித்து ஏற்கனவே, கடந்த ஆண்டு நமது ஈடிவி பாரத் சிறப்புச் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அதன்மூலம் தற்போது தொழில் வளர்ச்சி எட்டியுள்ளதை அவர் நன்றியுடன் நினைவுகூர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழா’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்