தூத்துக்குடி மாவட்டம், மடத்தூர் மெயின் ரோடு பி&டி காலனியைச் சேர்ந்தவர் சங்கர் (42). இவருடைய மனைவி கோகிலா (26). இந்த தம்பதியினருக்குப் புவனா என்ற அட்சயா என்ற மூன்று வயதில் மகள் இருந்தாள். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்தவரான சங்கர் ஜவுளி வியாபாரத்திற்காக தூத்துக்குடியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், மனைவி கோகிலா நடத்தையில் சந்தேகம் அடைந்த சங்கர், கடந்த 2014ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி ஏற்பட்ட தகராறின் போது, கோகிலாவை கிரைண்டர் கல்லால் தாக்கி கொலை செய்தார். மகள் புவனாவையும், காலால் எட்டி உதைத்தும் சுவற்றில் வீசி எறிந்தும் கொலை செய்தார்.
இந்த இரட்டை கொலை சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் மகிளா கோர்ட்டு சிறப்பு வழக்கறிஞர் வி.சுபாஷினி ஆஜராகி வாதாடினார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டியராஜ், இன்று(டிச.1) தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட சங்கருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.