'பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று' - குறள்
இந்த குறளுக்கான விளக்கம், பொருள் என்னும் செல்வம் நமது கையில் இருந்துவிட்டால் எவ்விடத்திற்கும் சென்று துன்பம் எனும் இருளை விரட்டி விடலாம் என்பதாகும். பொய்யாமொழிப் புலவர் 'வள்ளுவர்' சொன்னதே நிகழ்கால நிதர்சனம். தேவை இருப்போருக்கும், தேவைக்கு அதிகமாய் சேர்ப்போருக்கும் உள்ள ஒரே பிணைப்பு சேமிப்பு தான்.
சேமிப்பின் அவசியத்தை ஏடுகளில் எழுதி வைத்தால் மட்டும் போதாது, அதை வாழ்க்கை ஓட்டத்தில் மக்கள் உணர்வுகளோடு கலந்திட வேண்டும் என்பதனாலேயே மனிதனின் தேவைக்கு மட்டும் இறைவன் எல்லையை வரையறுக்க மறந்துவிட்டான் போலும்.
சிறுசேமிப்பில் முன்னோடியாகத் திகழும் தபால் துறை:-
நூற்றாண்டு கடந்து சேவையாற்றி வரும் தபால் நிலையங்கள் மக்களின் நம்பிக்கைக்குரிய ஸ்தாபனம் என்றால் அது மிகையல்ல. தபால் சேவையைத் தொடர்ந்து, முதன்முதலாக மக்களிடையே 'சிறுசேமிப்பு' பழக்கத்தை ஏற்படுத்திய பெருமை தபால் துறையையே சாரும். மக்கள் தாமாக முன்வந்து தங்களின் உழைப்பில் இருந்து, ஒரு பகுதியை சேமிப்பாக தபால் நிலையங்களில் வரவு வைக்கும்பொழுது, அந்த பணத்திற்கு மதிப்புக்கூட்டு நிதியாக, வட்டி வழங்கி சேமிப்பை, இரட்டிப்பாக வாடிக்கையாளர்களுக்குத் திருப்பி வழங்கிய பெருமையும் தபால் துறையையே சாரும்.
காலத்திற்கேற்ற பரிணாம வளர்ச்சி:-
தபால் துறையின் இந்த நுட்பமான நடவடிக்கை மக்களிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தது என்பது உண்மை. இன்று நாடு முழுவதும் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கை வரலாற்றிலும் அஞ்சலக சிறுசேமிப்புக் கணக்கு கட்டாயம் இருந்திருக்கும்.
இன்றும் நாட்டின் பெருவாரியான மக்களை வாடிக்கையாளர்களாக கொண்டு லாபத்தில் இயங்கி வரும் தபால் துறை வளர்ச்சிக்கு முத்தாய்ப்பாய் அமைந்த ஒரு சில திட்டங்கள் குறித்தும் தபால் துறையில் ஏற்பட்டுள்ள நுட்பங்கள் குறித்தும் தற்போது காணலாம்.
1.செல்வமகள் சேமிப்புத் திட்டம்:-
பெண் குழந்தைகளின் நலனுக்காக தபால் துறையால் ஏற்படுத்தப்பட்ட மிகச் சிறந்த திட்டம் இது. இந்தத்திட்டத்தின்படி, பிறந்த பெண் குழந்தை முதல் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் வரை, அவர்களின்பெயரில் சேமிப்புக் கணக்குத் தொடங்கலாம். மாதாந்திரம் குறைந்தபட்சம் 500 ரூபாய் அடிப்படையில் வருடத்திற்கு 1.5 லட்சம் ரூபாயை சேமிப்புத் தொகையாக, 15 ஆண்டுகள் கட்டி வர வேண்டும். 15 ஆண்டுகளுக்குப்பின் ஆறு ஆண்டுகள் பணம் எடுக்காமல் காத்திருந்து, பெண் குழந்தைக்கு 21 வயது பூர்த்தியாகும் சமயம் அவர்களின் கல்விக்கோ அல்லது திருமண செலவுக்கோ இந்த திட்டத்தின்கீழ் கிடைக்கும் முதிர்வுத் தொகையைப் பெறலாம். குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தோடு, முதிர்வுத்தொகையைத்தரும், இந்த திட்டம் தமிழ்நாட்டில் மிகச் சிறந்த திட்டமாக கருதப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு மிகுந்த வரவேற்பும் உள்ளது.
2.டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட்:-
தபால் துறையின் புதிய திட்டங்கள் அனைத்தும் மிகப்பெரும் வெற்றி பெறுவதற்கான முக்கியக்காரணம், வீட்டு வாசலுக்கே வந்து சேவை செய்யும் அந்த மனப்பாங்கு தான். அந்த வகையில் தபால் துறையின் மற்றுமொரு சிறந்த திட்டமாக 'டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட் திட்டம்’ கருதப்படுகிறது. தபால் துறையின் ஒரு அங்கமான 'இந்தியா பேமென்ட்ஸ் வங்கி' மூலமாக, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலமாக, ஓய்வூதியதாரர்கள் மிகப்பெரும் பலன் அடைந்து வருகின்றனர். மத்திய - மாநில அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஒவ்வொருமாதமும் பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பென்ஷன் பெறும் ஓய்வுபெற்ற அதிகாரிகள், பணியாளர்கள் தொடர்ந்து அரசாங்கத்திடம் இருந்து ஓய்வு நிதி பெற ஆண்டிற்கு ஒருமுறை உயிர்ப்புச் சான்றிதழ் புதிப்பிக்க வேண்டும்.
ஆண்டின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்தியா முழுவதும் அந்தந்த மாநிலங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களில் கருவூல அலுவலகத்தில் ஓய்வூதியர்களின் கூட்டம் இதற்காகவே அலைமோதும்.
உடல்நிலை ஒத்துழைக்காத ஓய்வூதியதாரர்கள் நேரில் வர இயலவில்லை எனில், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பென்சன் அடுத்த சில மாதங்களிலேயே நிறுத்தப்படும் அபாயம் இருந்தது. எனவே, ஓய்வூதியதாரர்களின் கடைசி கட்ட வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்களை தவிர்ப்பதற்காகவும் சரியான நபர்களுக்கு ஓய்வூதியம் போய் சேரவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டும் தபால் துறை, இந்த திட்டத்தை கையில் எடுத்தது.
குறிப்பாக கரோனா நோய் தாக்கம் உச்சத்தில் இருந்த பொழுது, முதியவர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக குறுகிய காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் இன்று மிகப்பெரிய அளவில் சாதனைப் படைத்துள்ளது. இந்த திட்டத்தின்படி, தபால் சேவகர்கள் ஓய்வூதியதாரர்கள் வீடுகளுக்கே நேரடியாக சென்று அவர்களின் உயிர்ப்புச் சான்றிதழை புதுப்பித்து தருகின்றனர். இதற்கு தபால் துறை மூலமாக ரூ.70 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
வீட்டிற்கு வந்து சேவையாற்றும் தபால் சேவகர்கள் மூலமாகவே, நமது சேமிப்புக் கணக்கில் இருந்தும் பணம் எடுத்துக் கொள்வதற்கும், பணம் செலுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தபால் துறையின் இந்த செயல் திட்டத்தால், ஓய்வூதியதாரர்கள் கருவூலங்களில் காத்திருக்காமல், தங்களின் ஓய்வு காலத்தை நிம்மதியாக வீட்டில் இருந்தவாறே மகிழ்ச்சியுடன் கழித்து வருகின்றனர்.
3. தங்க பத்திர சேமிப்புத் திட்டம்:-
அதாவது கிராமப்புறங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தின்கீழ், 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் பணியில் ஈடுபடும் பெண்களுக்கு கூலி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக செலுத்தப்பட்டு வந்தது. வங்கிகள் மூலமாக கூலி செலுத்தப்பட்டு வந்த நிலையில், ஒரு சிலருக்கு கூலி சரியாக கிடைத்தும் ஒரு சிலருக்குப் பணம் கிடைப்பதில் சிக்கல் நிலையும் இருந்து வந்தது. இதனால் 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் நடப்பதாக பெரும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
முறையான சம்பளம் வழங்கக்கோரி பொதுமக்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வை எட்டும் வகையில் மத்திய அரசு மற்றும் இந்திய தபால் துறை ஆகியவை இணைந்து 'இந்தியா பேமென்ட்ஸ் வங்கி' மூலம் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு சம்பளம் வழங்க முடிவு செய்தது. அதன்படி கிராமப்புறத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் ஒவ்வொரு பெண்களுக்கும் அஞ்சல் துறை வங்கியான 'இந்தியா பேமென்ட் வங்கி’-யில் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு, அதன் மூலமாக அவர்களின் வங்கிக்கணக்கில் சம்பளப்பணம் உடனுக்குடன் வரவு வைக்கப்பட்டது. மேலும் இந்தக் கணக்குத் தொடங்குதல் நடைமுறைக்காக கிராமத்தவர்கள் அஞ்சலகங்களை தேடி செல்ல வேண்டும் என்ற நிலையையும் மாற்றி, அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று 10 நிமிடங்களுக்கு உள்ளாக வாடிக்கையாளர்களுக்கு சேமிப்புக்கணக்குத் தொடங்கி சேவையாற்றி வருகின்றனர். தற்பொழுது கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த நடைமுறையின் மூலமாக, தாங்கள் வேலை செய்வதற்கான கூலி சரியாக கணக்கில் வரவு வைக்கப்படுவதாக பலனை அனுபவித்த பெண்கள் கூறினர்.
6.சிறப்பான சேவை வழங்க செயலி:-
மற்ற வங்கிகளைப் போன்றே சிறந்த சேவையினை மக்களுக்கு வழங்கும் பொருட்டு இணையவழி கணக்குத் தொடங்குதல், பணப்பரிமாற்றம், மின்சார கட்டணம், ஏடிஎம் கார்டு, மின்னணு கணக்கு அட்டை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் காலத்திற்கு ஏற்ற வகையில் சேவையினை மக்களுக்கு வழங்கி வருகிறது, தபால் துறை. இதற்காக தபால் துறை சார்பில், பிரத்யேகமாக செயலிகளும் உருவாக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
செயலியைப் பயன்படுத்த தெரியாதவர்களுக்கு தபால் முகவர்கள் மூலமாகவும், தபால் சேவகர்கள் மூலமாகவும் சேவையாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். மற்ற வங்கிகளின் தற்கால வேகமான நடவடிக்கைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தபால் துறை வாடிக்கையாளர்களை தன் வசம் தக்க வைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய நடைமுறைகளும், புதிய திட்டங்களும் வாடிக்கையாளர்கள் இடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றன.
இருப்பினும் இணைய வேகத்தில் ஏற்படும் பிரச்னைகள் வாடிக்கையாளர்களுக்கு சேவை ஆற்றுவதில் இருக்கும் சிறு குறையாக கருதப்படுகிறது. இந்தப் பிரச்சனை சீர் செய்யப்படின் மனநிறைவான சேவையை தபால் துறை வழங்கி வருகிறது என்பதில் எவ்வித ஐயமும் கொள்ளத் தேவையில்லை.
"சிறுதுளி பெருவெள்ளம்" இது வெறும் வார்த்தை மட்டும் அல்ல. வாழ்க்கையின் மூலக்கூறை இரண்டு சொற்களுக்குள் அடக்கிய பொன்மொழி. இதற்கு ஒப்பானதாய் விளங்கும் 'தபால் துறை' என்றும் பெருவெள்ளமாக மக்களுக்கு நன்மை செய்யக் காத்திருக்கிறது என்பது திண்ணம்.