தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் (வயது 50). டி.வி.மெக்கானிக்காக வேலைசெய்து வரும் இவர் தூத்துக்குடி மாவட்ட திமுக கலை இலக்கிய அணி துணை அமைப்பாளராகவும் உள்ளார். இவர், பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அடிக்கடி அவருடன் வல்லுறவில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதன் விளைவாக அந்த சிறுமி கர்ப்பம் தரித்தார். கர்ப்பம் அடைந்ததுகூட தெரியாமல் அந்த சிறுமி தொடர்ந்து பள்ளி சென்றுவந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக சிறுமியை அவளது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பம் அடைந்திருப்பதாக கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனது குழந்தையின் எதிர்காலம் இப்படி சீரழிந்துவிட்டதே என நினைத்து கதறி அழுதனர்.
இதைத் தொடர்ந்து சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்த அவளது பெற்றோர்கள், கர்ப்பம் கலைவதற்கு மருந்து கொடுத்ததில் சிறுமிக்கு, 6 மாத சிசு இறந்த நிலையில் பிறந்துள்ளது. இறந்த நிலையில் பிறந்த குழந்தையை வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டப் பகுதியில் சிறுமியின் வீட்டார் குழி தோண்டி புதைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து காவல் துறையினர் சிறுமியின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சிறுமியை திமுக பிரமுகர் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கியதும், திமுக பிரமுகர் ராஜ் ”இதை வெளியே யாரிடமும் சொன்னால் உன்னை கொன்று விடுவேன்” என சிறுமியை மிரட்டியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து திமுக பிரமுகர் ராஜை காவல்துறையினர் "போக்சோ" சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மேலும் குழந்தை இறப்பின் மீது சந்தேகத்திற்கிடமான சாவு என வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார், புதூர் வருவாய் ஆய்வாளர் அமுதா, முடிவைத்தானேந்தல் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய ஃபாத்திமா ராணி ஆகியோர் முன்னிலையில் புதைக்கப்பட்ட சிசுவின் உடலை உடற்கூறாய்வு செய்ய அந்த உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
குழந்தையின் உடலை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பிரதாபன், உதயகுமார் தலைமையிலான மருத்துவ நிபுணர்கள் குழு உடற்கூறாய்வு செய்தனர்.
இதுகுறித்து காவல் துறை தரப்பில் தெரிவிக்கும்போது, குழந்தையின் உடற்கூறாய்வு குறித்த அறிக்கை விரைவில் பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதைத் தொடர்ந்தே குழந்தை இறப்பு இயற்கையானதா அல்லது கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதா என்பது தெரியவரும் என்றனர்.
இதற்கிடையே வழக்கில் திடுக்கிடும் திருப்பமாக சிறுமிக்கு பிறந்த குழந்தை கொன்று புதைக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமிக்கு பிறந்த குழந்தை மண்வெட்டியால் அடித்து கொலைசெய்யப்பட்டு வீட்டுத் தோட்டத்தில் புதைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக சிறுமியின் தாயார், மூத்த சகோதரி ஆகியோரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமியை வன்புணர்வு செய்தது தொடர்பாக மேலும் 4 பேர் சிக்கலாம் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: அரும்பாக்கம் தனியார் கல்லூரியில் முன்னாள் பேராசிரியை தூக்கிட்டு தற்கொலை