உலகம் முழுவதும் இன்று உழைப்பாளர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மே தின பேரணி இன்று நடைபெற்றது. காலை ஒன்பது மணி அளவில் தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியிலிருந்து தொடங்கிய பேரணி சுமார் 2 கிலோ மீட்டர் பயணித்து சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே முடிவடைந்தது. பின்னர், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்போது, "மே தினத்தை கொண்டாடுவதற்கான உரிமை திமுகவிற்கு மட்டுமே உள்ளது. ஏனெனில், உழைப்பாளர்களுக்காக போராடி இன்றும் போராடிக் கொண்டிருக்க கூடிய இயக்கம் திமுகதான். சென்னையில் மே தின பூங்கா அமைத்து அதில் உழைப்பாளர் சின்னம் எவ்வாறு இருக்க வேண்டும், அது வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை அதன் அருகிலேயே இருந்து வடிவமைத்து தந்தவர் மறைந்த தலைவர் கருணாநிதி. ஆகவே மே தினத்தை உரிமையோடு எடுத்து கொண்டாடுவதற்கான பெருமை திமுகவையே சேரும்.
தற்போது நாட்டின் பிரதமராக செயல்படக்கூடிய மோடி காவலாளியாக அல்ல இந்த நாட்டின் களவாணியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். வருகிற மே 23ம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படக் கூடிய சமயம் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக உங்களால் தேர்ந்தெடுக்கப்படவுள்ள கனிமொழியும், சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் மூலமாக திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களும் வெற்றி பெற்று அறிவிக்கப்படவுள்ளனர்.
மே 23 ஆம் தேதி அன்று சூரியன் எழுச்சியோடு உதயமாகி மேலே வரும். இதை தொடர்ந்து தமிழகத்தில் நல்லதொரு ஆட்சி மலர போகிறது. அனைவருக்கும் இனிய மே தின வாழ்த்துக்கள்" எனக் கூறினார்.
இந்த மே தின பேரணியில் தொமுச, மின் கழக ஊழியர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், பொது மக்கள், கட்சியினர், மாணவ அமைப்பினர் உள்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.