முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பரப்புரைக்காக வருகின்ற மூன்றாம் தேதி தூத்துக்குடி வருகிறார். 2 நாள்கள் தேர்தல் பரப்புரை செய்யவுள்ள அவர், அங்கு நடைபெறும் 18 நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இதனையொட்டி அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, "எந்தவொரு மனிதனுக்கும் தன்னுடைய உடல்நிலை முக்கியம். உயிர் முக்கியம். ஆகவே தன்னுடைய உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டுதான் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த நீடுழி வாழ வேண்டும் என்றுதான் நாங்களும் நினைக்கிறோம்.
ரஜினிகாந்த் நினைப்பதுபோலதான் எங்கள் எண்ணமும் இருக்கிறது. எனவே உடல் நிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள அவரது முடிவை விமர்சிக்க ஒன்றுமில்லை. அதிமுக இரண்டாக உடையும் என ஸ்டாலின் கூறியது எந்தக் காலத்திலும் நடக்கப் போவதில்லை. எப்போதும் நடக்காததை பற்றியே ஸ்டாலின் பேசுவார். அவருடைய கனவு பதவி வெறி. கட்சியிலும் ஆட்சியிலும் கருணாநிதி குடும்பத்தினர்தான் முன்னிலைப்படுத்தப்படுவார்கள்.
அந்த நிலைப்பாட்டில்தான் திமுகவினர் கட்சியை நடத்துவார்கள். அதிமுகவில்தான் ஒரு தொண்டன் முதலமைச்சராக உயர முடியும். இன்றைக்கு ஒரு எளிய தொண்டனாக இருந்து முதலமைச்சராக உயர்ந்து எடப்பாடி பழனிசாமி பணியாற்றி வருகிறார். முதலமைச்சர் பதவி அவரைத் தேடி வந்தது. ஆனால் ஸ்டாலின் முழுக்க முழுக்க முதலமைச்சர் கனவிலேயே இருக்கிறார். அவர் வாழ்நாள் முழுவதும் கனவு காண வேண்டியதுதான்" என்றார்.
இதையும் படிங்க: 'பணம் கேட்டால் மூக்கை உடைப்பார்கள், ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து செய்வார்' - முதலமைச்சர் பழனிசாமி