தூத்துக்குடி: கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காகவும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய திட்டங்களை அறிவிப்பதற்காகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (அக்டோபர் 13) தூத்துக்குடி வரவுள்ளார். அவரை வரவேற்கும் விதமாக தூத்துக்குடி விமான நிலையம் முதல் தூத்துக்குடி மாநகர் வரையில் சுமார் 20கி.மீ தூரம் வரை அதிமுக கட்சிக் கொடிகள், வரவேற்பு பதாகைகள் வைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதில், பல இடங்களில் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் அமைக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக தூத்துக்குடி திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துக்குமார், ஆஸ்கார் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய 9ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் முத்துக்குமார், " முதலமைச்சருக்கு வைத்துள்ள வரவேற்பு பேனர்கள் பல இடங்களில் தமிழ்நாடு மின்சார வாரிய உயர் மின் அழுத்த கம்பிகளுக்கு நெருக்கமாக வைக்கப்பட்டுள்ளன. மேலும், பல இடங்களில் சாயும் நிலையில் கம்பங்கள் கட்டப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு இடையூறாகவும், விபத்து ஏற்படும் வண்ணமும் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள வரவேற்பு பதாகைகள், கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்துள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: முதலமைச்சரை விமர்சித்த முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன்