தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் 1.20 லட்சம் மதிப்பிலான திறந்தவெளி குடிநீர் திட்டப் பணியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று (டிசம்பர் 9) தொடங்கி வைத்தார். அதேபோல் பாரதி நகர், மகாலட்சுமி ஆகிய பகுதியில் 69 லட்சம் மதிப்புள்ள பேர்வேல் பிளாக் சாலையை திறந்து வைத்தார். இதனைதொடர்ந்து தீயணைப்பு நிலையம் பகுதியில் 3 லட்சம் மதிப்பில் உள்ள குடிநீர் வசதி திட்டத்தை தொடங்கி வைத்து பின்னர் குமராபுரம் பகுதியில் குடிநீர் திட்டம் மற்றும் தடுப்பு சுவர் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், " திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசாவுக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி பேச அருகதை கிடையாது. காற்றிலும்கூட ஊழல் செய்ய முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டிய நவீன விஞ்ஞானி ஆ.ராசா. 2ஜி மூலமாக அவரும், கனிமொழியும் ஜோடி சேர்ந்து ஜோடியாக திகார் சிறையில் இருந்தார்கள் என்பது வரலாற்று உண்மை. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் அமைச்சராக இருந்தவர்கள் மீது காங்கிரஸ் அரசே வழக்குப் போட்டு அவர்கள் சிறைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதைத்தான் திமுக தலைவராக இருந்த கருணாநிதி கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொன்னார்.
இப்படிப்பட்ட இழி நிலையில் உள்ள ராசாவுக்கு ஏழைகளின் இதய தெய்வமாக உள்ள ஜெயலலிதாவை பற்றி பேச அருகதை இல்லை. அவருக்கு நாவடக்கம் வேண்டும். அண்ணாவின் நினைவிடத்தில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று எழுதப்பட்டுள்ளது. அதைப்போல ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஏதோ ஒரு எழுத்தை எழுதுவோம். ஆட்சிக்கு வந்தால் இடிப்போம் என்கிறார். அவ்வாறு இடித்தால் அவருடைய கை வெட்டப்படும் ஒன்றரை கோடி தொண்டர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஜெயலலிதாவை இழிவாக பேசுகிற நேரத்தில் ஒரு ராசா அல்ல ஓராயிரம் ராசாக்கள் வந்தாலும் அவர்கள் இருக்கின்ற இடம் தடம் தெரியாமல் அழிந்து போவார்கள். எனவே அவரை பற்றி இழிவாகப் பேசினால் நாட்டில் நடமாட முடியாத நிலையை ஆ.ராசா விரைவில் சந்திப்பார்" என்றார்.
இதையும் படிங்க: ஆ. ராசா மீது அதிமுக புகார் மனு!