தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுக்காவிற்குட்பட்ட சிவகளை கிராமத்தில் சுமார் 2ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள தொல்லியல் களத்தில் பழங்கால ஈட்டி, வேல், எடை கற்கள் என பல பொருள்கள் கிடைத்தன. இதனால், ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பகுதியில் இரும்பு பொருள்கள் கிடைத்ததால் இந்தப் பகுதி இரும்புகாலத்தைச் சார்ந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு தொல்லியல் துறையினர் சார்பில் ஆதிச்சநல்லூர் சிவகளையில் அகழாய்வு பணி கடந்த மே 25ஆம் தேதி தொடங்கியது. சிவகளை பகுதியில் வாழ்விடங்களை கண்டறிவதற்காக தோண்டப்பட்ட பகுதியில் கடந்த 17ஆம் தேதி 5 மண்பானை ஓடுகளில் கீறல்கள் மற்றும் குறியீடுகள் கிடைத்தன. இதன் தொடர்ச்சியாக சிவகளை பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அப்போது சிவகளை அருகேயுள்ள ஸ்ரீமூலக்கரை பகுதியில் இரும்பு காலத்தில் இரும்பு பொருள்களை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இரும்பு உருக்கு ஆலை பகுதியில் உள்ள இரும்பு கழிவுகளை கண்டறிந்தார். தற்போது நடைபெறும் அகழாய்வு பணியுடன் சேர்த்து இப்பகுதியை ஆய்வு மேற்கொண்டால் மேலும் பல வரலாற்று தகவல்கள் வெளிவரும் என தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: இறந்தவரின் உடலை தர மறுத்த மருத்துவமனை: 'ரமணா' பட பாணியில் நடந்த சோகம்!