தூத்துக்குடி: தூத்துக்குடி சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு போதுமானதாக இல்லை எனக்கருதி, மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் அளிக்க வந்திருந்தனர்.
குறிப்பாக, புதூர் பாண்டியபுரம் மற்றும் தெற்கு வீரபாண்டியபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது மாவட்ட ஆட்சியர் விவசாயிகளை மிரட்டியதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
'தூத்துக்குடி சிப்காட் விரிவாக்கத்திற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு தரப்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
வேறுவழியின்றி விவசாய நிலத்தை நாங்களும் சிப்காட் விரிவாக்கத்திற்காக தருவதென ஒப்புக்கொண்டோம்.
உரிய இழப்பீடு வேண்டும்
இதற்கு இழப்பீடாக அரசு தரப்பில் 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே தர முடியும் எனத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், எங்களுக்குச் சொந்தமான இடத்திற்கு அருகிலேயே இருக்கும் நிலங்கள், தனியார் கம்பெனிகள் மூலம் ரூ.1.25 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன.
ஆகவே, சந்தை மதிப்பு அதிகம் உள்ள எங்கள் நிலத்திற்கு அரசு தரப்பில் மிகச்சொற்ப அளவிலேயே இழப்பீட்டுத் தொகை தருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதை மாற்றி நான்கில் ஒரு பங்காக நபர் ஒருவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடுத்தர வேண்டும் எனக்கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம்.
ஆனால், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், அரசாங்கம் தரும் இழப்பீட்டுத்தொகையை மட்டும் பெற்றுக்கொண்டு ஒதுங்கிக்கொள்ளுங்கள். இல்லை என்றால், உங்களின் மீது சட்டப்பிரிவு எண் 107 மற்றும் 110 விதிகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பட்டமாக மிரட்டிப் பேசுகிறார்.
நாங்கள் இடம் தரமாட்டோம் என எந்தச் சூழ்நிலையிலும் சொல்லவில்லை. அதே வேளையில், எங்களுக்குத் தரப்படும் இழப்பீட்டுத்தொகையை அதிகப்படுத்தித் தரவேண்டும் என்று கேட்கிறோம். எனவே, இதற்கு தமிழ்நாடு அரசுதான் தக்க பதில் சொல்ல வேண்டும்' என்றனர்.
இதையும் படிங்க: என் அன்பு எஸ்பிபி - 'அண்ணாத்த' படப்பாடல் குறித்து உருகிய ரஜினிகாந்த்