இது தொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில், எனது கணவர் ஜெயராஜும், எனது மகன் பென்னிக்ஸும் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் மொபைல் கடை வைத்து நடத்திவந்தனர். ஜூன் 19ஆம் தேதி மாலை ரோந்துவந்த காவலர்கள் கடையை அடைக்கும்படி கூறியுள்ளனர். என் கணவரும் மகனும் உடனடியாக கடையை அடைத்துவிட்டனர். அதேபோல் ஜூன் 20ஆம் தேதி ரோந்துவந்த உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் ஜேசுராஜ் ஆகியோர் என் கணவரை கொச்சை வார்த்தைகளால் திட்டி சட்டையைப் பிடித்து அடித்துள்ளனர். எதற்கான என் தந்தையை அடிக்கிறீர்கள் என என் மகன் கேட்டதற்கு காவல் நிலையம் வா தெரியும் என சொல்லியிருக்கிறார்கள்.
காவல் நிலையம் சென்றபோது, வாசலில் நின்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் என் கணவரை கொச்சை வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் அடித்துள்ளார். இதை பார்த்த என் மகன், என் அப்பா உடல்நிலை சரியில்லாதவர் அவரை அடிக்காதீர்கள் என கூறியிருக்கிறார். இதைக் கேட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், போலீஸையா எதிர்த்து பேசுகிறாய் என உதவி ஆய்வாளர் பால்துரையை பார்த்து இவனையும் (பென்னிக்ஸ்) அடிங்க என கூறியுள்ளார். அப்போது அங்கிருந்த காவல் நிலைய தன்னார்வ தொண்டர்களும் இணைந்து என் மகனை தாக்கியுள்ளனர். கொடூரமாக தாக்கியதில் என் மகனின் பின்பகுதி கிழிந்து ரத்தம் வழிந்துள்ளது. என் கணவரையும் ரத்தம் சொட்ட சொட்ட அடித்து நிர்வாணமாக லாக்கப்பில் போட்டுள்ளனர்.
பின்னர் இரவு 11.30 மணிக்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், 1.30 மணி வரை அடித்துள்ளார். சம்பவத்தை கேள்விப்பட்டு நான் காவல் நிலையம் சென்றபோது, எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள் என கூறிவிட்டார்கள். ஜூன் 21ஆம் தேதி என் கணவரையும் மகனையும் மருத்துவரிடம் காட்டி தகுதிச்சான்று பெற்று, சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவில்பட்டி சிறையில் அடைத்துள்ளனர். ஜூன் 22ஆம் தேதி இரவு என் மகன் இறந்துவிட்டதாக தகவல் வந்தது. ஜூன் 23ஆம் தேதி என் கணவரும் இறந்துவிட்டார். சாத்தான்குளம் காவலர்கள் தாக்கியதில்தான் இருவரும் இறந்துவிட்டனர்.
எனவே என் கணவரையும் மகனையும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கி கொலை செய்த ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், பால்துரை, ரகு கணேஷ் மற்றும் காவலர்கள் வேலுமுத்து, ஜேசுராஜ், சாமத்துரை, பாலா மற்றும் காவல் நிலைய தன்னார்வ தொண்டர்களான கணபதி, கண்ணன், ஜேக்கப், எலிசா, மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். இதனை விசாரித்து நீதியும் நிவாரணமும் பெற்றுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.