தமிழ்நாட்டின் பாரம்பரிய தொழில்களில் ஒன்று உப்பு உற்பத்தி. இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக தமிழ்நாட்டில் தூத்துக்குடியில்தான் உப்பு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் கடலோரத்தையொட்டியுள்ள 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் உப்பு உற்பத்தியின் மூலமாக ஆண்டுக்கு 22 லட்சம் டன் உப்பு விளைவிக்கப்படுகிறது. நேரடியாக 50 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக 25 ஆயிரம் தொழிலாளர்களும், முறைசாரா உப்பு உற்பத்தி தொழிலை நம்பி 15 ஆயிரம் குடும்பங்களுமாய், சுமார் ஒரு லட்சம் பேர் இத்தொழிலை நம்பியுள்ளனர். இதில், ஆண்களை விட பெண் தொழிலாளர்களே அதிகம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. சில பகுதிகளில் தற்போதும் குடிசைத் தொழிலாக இது நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடியில் கல் உப்பு, சிறுமணி உப்பு, சீனித் தன்மையுடைய தூள் உப்பு (ப்ரீ ஃபுளோ) ஆகிய பதத்தில் உப்பு அரைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இலங்கை, மலேசியா, இந்தோனேஷியா, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கும் வணிகரீதியாக கப்பல்களில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த சூழலில் தற்போது கரோனா தொற்று காலத்தில் கல் உப்பு எனப்படும் "கிறிஸ்டல்" உப்பின் விலை கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்காக விலை அதிகரித்துள்ளது.
கரோனாவுக்கும் கல் உப்புக்கும் என்ன தொடர்பு:
கல் உப்பை பயன்படுத்தி தயாரிக்கும் கிருமிநாசினியில் கரோனாவைத் தடுக்கும் திறன் உள்ளது. இதனால் இதனுடைய விலையும், விற்பனையும் தற்போது அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடியைச் சேர்ந்த உப்பு உற்பத்தியாளர்களிடம் கேட்கையில், “கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 60 விழுக்காடு அளவுக்கு மட்டுமே உப்பு உற்பத்தி நடைபெற்றுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக உப்பை கிருமிநாசினியாக மக்கள் வாங்கி பயன்படுத்துவதால் உப்பின் தேவை அதிகரித்துள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெந்நீரில் மஞ்சள், உப்பு கரைத்து வாய் கொப்பளித்தல் மற்றும் காய்கறிகளை உப்பு கரைசலில் கழுவி பயன்படுத்துவதும், அதேபோல் உப்பு, மஞ்சள், வேப்பிலை கொண்டு ஆவி பிடித்தல் போன்றவற்றாலும் கல் உப்பின் மதிப்பு உயர்ந்துள்ளது.
நோய்த் தொற்று ஏற்பட்ட சுற்றுப்புறங்களில் உப்பு கரைத்த நீரை கிருமிநாசினியாக தெளிக்க பயன்படுத்துவதால் சமீபத்தில் உப்புக்கு நல்ல விலை கிடைத்துவருகிறது” என்றார்.
விலை நிலவரம்
கரோனா ஊரடங்குக்கு முன்னர் டன் ஒன்றுக்கு 800 ரூபாய் நிர்ணயம் செய்திருந்த நிலையில், தற்பொழுது உப்புத்தேவை காரணமாக டன் ரூ.1300 முதல் 1500 வரை எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து உப்பள உரிமையாளர் கணேசன் கூறுகையில், “கரோனா ஊரடங்கினால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உப்பளங்களில் தொழில் செய்ய முடியாமல் போனது. இது உப்பு உற்பத்தி குறைவுக்கு முக்கிய காரணம். தமிழ்நாடு அரசு அளித்த விலக்கினால் உப்பு உற்பத்தியை மீண்டும் தொடங்கி நடத்தி வருகிறோம். ஆனால், விலையேற்றம் ஏற்பட்ட நிலையில் உற்பத்தி குறைவானது வருத்தம் அளிக்கிறது” என்றார்.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், “விவரமறிந்த நாள் முதலே உப்புத் தொழிலை மட்டுமே நம்பி எங்களின் வாழ்க்கையை நடத்துகிறோம். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி குறைந்துள்ளது. உப்பு தேவைக்கு ஏற்றபடி உற்பத்தி செய்ய முடியவில்லை. இதற்கு முன்னர் வாரத்தின் 7 நாட்களிலும் உப்பளத்தில் பணி செய்து வந்தோம். ஆனால், தற்பொழுது உள்ள கரோனா அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக உப்பள உரிமையாளர்கள் வாரத்தில் 4 அல்லது 5 நாட்கள் மட்டுமே வேலை கொடுக்கின்றனர். உப்பளத் தொழிலாளர்கள் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்
இதையும் படிங்க:என்ன... உப்பு 30 ஆயிரம் ரூபாயா!