தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், "செய்துங்கநல்லூரைச் சேர்ந்த நபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர் டெல்லியில் நடந்த இஸ்லாமிய மதபோதக மாநாட்டிற்குச் சென்று திரும்பியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
அவருடைய உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்துவருகின்றனர். கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நபர் வசிக்கும் பகுதியிலிருந்து எட்டு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வசிக்கும் மக்கள் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை சுகாதாரத் துறை அலுவலர்கள் ஆய்வுசெய்து-வருகின்றனர்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன. ஸ்ரீவைகுண்டம் பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு வெளிநபர்கள் யாரும் உள்ளே வருவதற்கும், உள்ளிருந்து யாரும் வெளியே செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பேட்மாநகரம், காயல்பட்டணம், கயத்தாறு, தூத்துக்குடி ராமசாமி நகர் பகுதியைச் சேர்ந்த மேலும் 6 நபர்களும் டெல்லியில் நடைபெற்ற மதபோதக மாநாட்டிற்குச் சென்றுவந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி நாளை முதல் நியாயவிலைக் கடைகளில் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும், இலவச உணவு பொருள்களும் வழங்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு 100 நபர்கள் வீதம் நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருள் வழங்குவதற்கான டோக்கன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு நேரடியாக வீட்டில் சென்று உணவுப் பொருள்களை தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை வெளிநாடு சென்று திரும்பியவர்கள் 2,137 பேர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை சுகாதாரத் துறை குழுவினர் தினசரி கண்காணித்துவருகின்றனர்.
டெல்லியில் நடைபெற்ற மாநாட்டிற்கு சென்று தூத்துக்குடி திரும்பியவர்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்" என வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள புதிய செயலி...!