தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு வார்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்தும், மருந்துப் பொருள்களின் இருப்பு குறித்தும் திமுக எம்.பி. கனிமொழி ஆய்வுமேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ள பிரிவிற்கு மின்தூக்கி வசதி அமைக்க உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். அதிகளவு மக்கள் கூடுமிடங்களில் மாநகராட்சி சார்பில் கூடுதலாக கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
மக்கள் சிலர், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறியாமல் நியாயவிலைக் கடைகள், சந்தைகள் ஆகியவற்றில் சமூக இடைவெளியை கடைக்பிடிக்காமல் இருந்துவருகின்றனர். இதனைத் தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், ஊரடங்கு காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளை ஈடுசெய்ய தமிழ்நாடு அரசு மக்களுக்கு அளிக்கவுள்ள ஆயிரம் ரூபாய் போதுமானதாக இல்லை எனவும் இதற்காகக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, கரோனா நோய்த் தடுப்புப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு மக்கள் போதிய ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா சிறப்பு நிவாரண நிதி ஒதுக்கவில்லை - கட்டட தொழிலாளர்கள் வேதனை