தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு, தடியடி சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
இதுவரை நடத்தப்பட்ட 20ஆம் கட்ட விசாரணையில் நேரில் ஆஜராகி 465 பேர் விளக்கம் அளித்துள்ளனர். 634 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக, கடந்த 4 மாதமாக விசாரணை நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அலுவலர் அருணா ஜெகதீசன் தலைமையில் 21ஆம் கட்ட விசாரணை தொடங்கியது.
அரசு அலுவலர்கள் உள்பட 26 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டதில், 24 பேர் ஆஜராகி விளக்கமளித்தனர். இதில், 2 பேர் பிராமண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டுள்ளனர். இதனால், கடந்த நான்கு நாள்களாக நடைபெற்று வந்த ஒருநபர் கமிஷன் ஆணைய 21ஆம் கட்ட விசாரணை இன்றுடன் நிறைவு பெற்றது.
துப்பாக்கிச் சூடு தொடர்பாக இதுவரை 517 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. 679 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது. ஒருநபர் ஆணையத்தின் 22ஆவது கட்ட விசாரணை செப்டம்பர் மாதம் 2 அல்லது 3ஆவது வாரத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுரையில் அங்கொட லொக்கா கூட்டாளி தலைமறைவு - சிபிசிஐடி விசாரணை