தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆய்வு மேற்கொள்வதற்காக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையிலிருந்து நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அவருடன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது ஆதரவாளர்களும் வந்திருந்தனர்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, " அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் மீட்பதற்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் மசோதவை நிறைவேற்றியுள்ளோம்.
இதன் மூலம் கோயில் சொத்துக்களை யார் அபகரித்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். திருக்கோவில் வளர்ச்சியை சீரழிவுப்படுத்தும் நடவடிக்கைகளை தடுப்பதற்கு துறை சார்ந்து அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் கோயில்களில் பக்தர்கள் இலகுவாக சாமி தரிசனம் செய்வதற்கும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். திருக்கோயில்களில் பக்தர்களுக்கு நிறைவான மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோயில்களில் மொட்டை போடுவதற்கு கட்டணம் கிடையாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதன்மூலம் கோயில்களில் வருமானம் குறையும், பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற புகார்களும் எழுந்தது. இதைக் கணக்கில் எடுத்து திருக்கோயில் பணியாளர்களுக்கு உடனடியாக 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
இந்நிலையில், கோயில்களில் காது குத்துவதற்கு முறைகேடாக அதிக பணம் வசூலிப்பது குறித்தும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு துறைரீதியான குழுவின் மூலம் ஆய்வு நடத்தப்படும். அதன்படி யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாதவாறு பக்தர்கள் தங்களது காணிக்கை நிறைவாக இறைவனுக்கு செலுத்துவதற்கு அறநிலையத்துறை வழி காணும்" என்றார்.
இதையும் படிங்க: அமைச்சர் சேகர்பாபு 'செயல்பாபு'வாக இருக்கிறார் - ஸ்டாலின் பாராட்டு