தூத்துக்குடி:Tuticorin gun shoot: தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கெனவே நடந்த 33 கட்ட விசாரணையில் 1,031 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
1,346 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளன. இந்த மாதம் தொடக்கத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
கோவை காவல் ஆணையரிடம் விசாரணை:
இந்த நிலையில் 34ஆவது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அலுவலர் அருணா ஜெகதீசன் தலைமையில் நேற்று தொடங்கியது. இதில் நெல்லை மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளரும், தற்போதைய சென்னை குடியுரிமை பிரிவு அலுவலருமான அருண் சக்திகுமார் ஒருநபர் ஆணையம் முன்பு ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்தார்.அவரிடம் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், 2ஆம் நாளான இன்று கோவை காவல் ஆணையர் பிரதீப்குமார், துணை காவல் ஆணையர் ஜெயச்சந்திரன், காவல் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், தற்போது துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சம்பவத்தில் கூடுதல் பாதுகாப்புப் பணிக்கு தூத்துக்குடி வந்திருந்த கோவை காவல் ஆணையர் பிரதீப்குமார், மற்றும் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் ஒரு நபர் ஆணையத்தில் நேரில் ஆஜராகினர்.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.