தூத்துக்குடி: இந்தியாவில் கசகசா விதைகள் தடை செய்யப்படவில்லை என்றாலும், அவற்றைக் கையாளுவதில் பல கட்டுப்பாடுகளும், விதிகளும் உள்ளன. இவற்றை போதைப் பொருளாக பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதால், இவற்றை இறக்குமதி செய்ய மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் ஆணையரிடம் தடையில்லா சான்று மற்றும் உரிமம் பெற வேண்டும்.
இந்நிலையில், கடந்த வாரம் மலேசியாவில் இருந்து தூத்துக்குடி புதிய துறைமுகத்திற்கு வந்த கப்பலில் கண்டெய்னர் பெட்டியில் தவிடு என்ற பெயரில் கசகசாவை மறைத்து எடுத்து கடத்தப்படுவதாக தூத்துக்குடியில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்த ரகசிய தகவலின் அடிப்படையில், துறைமுக சாலையில் உள்ள தனியார் கண்டெய்னர் முனையத்தில் அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.
பின்னர் குறிப்பிட்ட ஒரு கண்டெய்னரில் முன்பக்கம் 9 டன் தவிடு மூட்டைகள் அடுக்கப்பட்டு இருந்ததை இறக்கி வைத்து சோதனையிட்டபோது, அதன் பின்பக்கம் 10 டன் அளவுள்ள கசகசாவை மறைத்து கடத்தியது தெரிய வந்துள்ளது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தல் நபரை தேடி வருகின்றனர்.
தற்போது இதன் இந்திய மதிப்பு ரூ.2.25 கோடி என கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அவற்றை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கூடலூர் அருகே ஊருக்குள் நுழைந்த 2 காட்டு யானைகள்.. களமிறங்கிய 4 கும்கி யானைகள்!