தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் நடராஜன் என்பவருக்கு சொந்தமான காம்பவுண்டு வீட்டில் ராஜமுருகன் என்பவர் தனது குடும்பத்துடன் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வருகிறார். தச்சு வேலை செய்து வரும் இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், பரமேஸ்வரி (22) என்ற மகளும், சுந்தர் (21) என்ற மகனும் உள்ளனர்.
பொறியியல் பட்டப்படிப்பை முடித்த பரமேஸ்வரி, அந்தோணியார்புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளார். ராஜமுருகன் குடியிருந்து வரும் வீட்டின் மேற்கூரை சேதமடைந்தையடுத்து நடராஜன் அதனை சரிசெய்து கொடுத்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு (மே 31) மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து உறங்கிகொண்டிருந்த பரமேஸ்வரி, சுந்தர் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரமேஸ்வரி உயிரிழந்தார். காயம் அடைந்த சுந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கோரி காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இதுதொடர்பாக வடபாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.