தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை, கரடிகுளம் சின்னகாலனி பகுதியைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள் அருகில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்களில் ஒருவர் குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்றதால் நீரில் மூழ்கியுள்ளார். சிறுவனைக் காப்பாற்றச் சென்ற மற்றொருவரும் குளத்தில் மூழ்கியுள்ளார்.
இருவரும் நீரில் மூழ்கியதைக் கண்ட பிற சிறுவர்கள் உடனடியாக அவர்களுடைய பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் விரைந்துவந்த பெற்றோர்கள் சிறுவர்களை மீட்டனர். இதில் சுகேஷ் (9) என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். கரண் (9) என்ற மற்றொரு சிறுவன் மீட்கப்பட்டு கழுகுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து கழுகுமலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவிக்கையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தப் பருவமழை காலம் என்பதனால் குளங்களில் நீர் தேங்கி நிற்கும். நீர்நிலைகள் தூர்வாரப்பட்டிருப்பதனால் தற்பொழுது ஆழம் எவ்வளவு இருக்கும் என்பது தெரியாது.
எனவே ஊர்களுக்கு அருகே உள்ள நீர்நிலைகளில் குழந்தைகள், சிறுவர்கள் உள்ளிட்டவர்கள் தனியே குளிக்கச் செல்வதற்குப் பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது. பெற்றோர்களின் கண்காணிப்பிலேயே சிறுவர்கள் நீர்நிலைகளில் குளிக்க வேண்டும். அவ்வாறு பார்த்துக்கொண்டால் உயிர் இழப்புகளைத் தவிர்க்கலாம்" என்றார்.
இதையும் படிங்க: கௌடண்யா ஆற்றில் மூழ்கி தாய், இரு மகள்கள் உயிரிழப்பு !