தூத்துக்குடி: தூத்துக்குடி கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக, திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப் படகின் நங்கூரம் அறுந்து, படகு திசை மாறி முத்துநகர் கடற்கரைப் பகுதியில் தரைதட்டி நிற்கிறது. இந்த நிலையில், படகை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி கடல் பகுதியில் 45 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக் கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக இன்று தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. அந்த வகையில், தங்கள் படகுகளை மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில், தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த சம்சு என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகு, திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது. இந்த நிலையில், நேற்று (டிச.16) இரவு கடல் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக, நாட்டுப்படகின் நங்கூரம் அறுந்து, கடல் பகுதியில் நாட்டுப்படகு திசை மாறிச் சென்று, முத்துநகர் கடற்கரைப் பகுதியில் தரைதட்டி நிற்கிறது.
இந்த படகில், படகு செல்வதற்கு பயன்படும் இதழ்கள் மற்றும் படகின் ஓரப்பகுதிகள் என 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, முத்துநகர் கடற்கரைப் பகுதியில் தரை தட்டி நிற்கும் நாட்டுப் படகை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழக அரசு தங்களுக்கு இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: இன்னும் இரு நாட்களில் எண்ணெய் கழிவுகளை அகற்ற இலக்கு.. எண்ணூர் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை!