தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள புது கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் செளந்திரராஜன். இவரது மகன் ஜான் ரவி (52). தொழிலதிபரான ஜான் ரவி, சென்னையில் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளரான இவர், அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் திமுகவினர் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சனம் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
கடந்த தினத்தில் இவர், தனது சமூக வலைத்தள பக்கத்தில் திமுக ஆட்சியைக் குறை சொல்வது, தமிழக முதலமைச்சர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பெரியார் குறித்து விமர்சனம் செய்துள்ளார். இதில், பெரியார் குறித்துத் தகாதவாறு பதிவு செய்துள்ளார்.
இதனை அடுத்து, ஜான் ரவியை மதுரை சைபர் கிரைம் போலீசார் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி புது கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர். (153A) - மதம், இனம் ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல், (504) - சமூகத்தில் பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்ளுதல், (505 1b) வதந்தியை பரப்புதல் ஆகிய பிரிவுகளில் கைது செய்துள்ளனர்.
மேலும், இவர் தனது தந்தை இறந்து சில நாட்களே ஆன நிலையில், அவருக்கும் 16-ஆம் நாள் காரியம் செய்வதற்குத் தூத்துக்குடி வந்துள்ளார். அப்போது தான் போலீசார் இவரை கைது செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இவர், மதுரை மேஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டார்.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதே போன்று சமூக வலைத்தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து தவறான தகவல் பதிவிட்டதால், இவரை குஜராத்திற்குச் சென்று தமிழக போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கணவர் இறந்துவிட்டதாக கூறி நாடகம்.. கொலை முயற்சி, சொத்துக்களை ஏமாற்ற திட்டம் என புகார்.. தாம்பரத்தில் நடந்தது என்ன?