தூத்துக்குடி: பிரதமரால் பாராட்டப்பட்ட தூத்துக்குடியில் உள்ள சலூன் கடையை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஆகஸ்ட். 13) நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் கடை உரிமையாளரால் இருக்கை வாங்க பணம் இல்லாதது குறித்து அறிந்த அண்ணாமலை 20ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து உதவியுள்ளார்.
தமிழகம் முழுவதும் பாஜக சார்பில், ‘என் மண் என் மக்கள்' என்ற பெயரில் மாநிலத் தலைவர் அண்ணாமலை அனைத்து தொகுதிகளுக்கும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் 15வது நாளாக இன்று (ஆகஸ்ட். 13) தூத்துக்குடி மாநகரில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
பின்னர், பிரசாரத்தை முடித்த அண்ணாமலை தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்த முடி திருத்தம் செய்யும் கடை நடத்தி வரும் பொன்.மாரியப்பன் என்பவர் கடைக்கு நேரில் சென்று சந்தித்தார். அவர் சலூன் கடையின் உள்ளேயே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை கொண்டு சிறிய நூலகம் ஒன்றை அமைத்துள்ளார்.
கடைக்கு நேரடியாக வந்த அண்ணாமலையை பொன். மாரியப்பன் வரவேற்றார். அப்போது அண்ணாமலை அவருடன் உரையாடினார். பொன். மாரியப்பன் கூறுகையில், "வாடிக்கையாளர்களை புத்தக வாசிப்பாளராக மட்டுமின்றி, ஒரு பேச்சாளராகவும் மாற்ற தயார் செய்து வருகிறேன்.
மேலும், புத்தகம் வாசிப்பது மட்டுமின்றி, பேச்சு பயிற்சி செய்தால் திருத்தம் செய்ய 80 ரூபாய் என்ற நிலையில், 30 ரூபாய் குறைத்து 50 ரூபாய் மட்டுமே வாங்குகிறேன்" என்று கூறினார். அதனை வியந்து பார்த்த அண்ணாமலை ஏன் உங்களுக்கு இவ்வளவு வெறி என்று கேட்டதற்கு, "வாசிப்பு திறன் அதிகம் உண்டு, மேற்கொண்டு படிக்க முடியவில்லை என்ற தாக்கத்தில் மற்றவர்களை படிக்க வைக்க வேண்டும். வாசிப்பு திறனை உருவாக்க வேண்டும் அதற்காக தான்" என்றார்.
அதன் பின், கடையின் இருக்கையை பற்றி கேட்டறிந்த அண்ணாமலை பணத்தை புத்தகத்தில் செலவிடுவதால் தன்னால் இருக்கை வாங்க முடியவில்லை என்றதும், உடனடியாக 20 ஆயிரம் ரூபாய் பணத்தை இருக்கை வாங்குவதற்காக அண்ணாமலை அளித்தார்.
அதற்கு பதிலாக பொன். மாரியப்பன் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு புத்தகம் ஒன்றை அளித்தார். அப்போது அந்த புத்தகத்துடன் சேர்த்து பண பையையும் அண்ணாமலை வாங்கிய போது, பொன். மாரியப்பன் "அண்ணா அந்த கவர் என்றதும், ஒ.. என்று சொல்லி சிரித்து கொண்டே ஆற தழுவி அவரை அணைத்தக் கொண்டார்". இது அங்கிருந்தவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "பொன். மாரியப்பன் சலூன் கடைக்கு வருவது பாக்கியமாக கருதுகிறேன். பிரதமர் மனதின் குரல் நிகழ்ச்சியில் பொன். மாரியப்பனை பற்றி பேசினார். முடி திருத்தம் செய்வதற்காக யாராவது காத்திருக்கும் போது புத்தகம் படிக்க நூல்கள் உள்ளன.
ஆச்சரியம் என்னவென்றால் முடி திருத்தம் செய்வதற்கு 80 ரூபாய் கட்டணம் என்றால் முடி திருத்தம் செய்யும் நேரத்தில் புத்தகங்களை படித்தால் 30 ரூபாய் குறைத்து 50 ரூபாய் வாங்குகின்றார். மிகுந்த சந்தோசம், உண்மையான ஒரு உழைப்பாளி, தேசபக்தர்.
புத்தகம் வாங்குவற்கு பணம் நிறைய செலவானதால் இருக்கை வாங்குவதற்கு பணம் இல்லை என்றார். அதனால் பாரதிய ஜனதா கட்சி சார்பாக புது இருக்கை வாங்குவதற்கு உதவி செய்துள்ளேன். மேலும், எனது இல்லத்தில் இருக்கக்கூடிய 100 புத்தகங்கள் அனுப்பப் போகிறேன். சமீபத்தில் கூட டெல்லியில் நூறாவது மனதின் குரல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பின்னர், சென்னையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் கவர்னரால் கவுரவிக்கப்பட்டார். தமிழகத்தில் தற்போது பேசப்படுகின்ற ஒரு மனிதராக பொன். மாரியப்பன் உள்ளார்" என்று கூறினார்.