கன்னியாகுமரி: அய்யா வைகுண்டரின் 191 வது அவதார தினத்தை (Ayya Vaikundar Avathara Thinam) முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து அய்யா வைகுண்டரின் தலைமை பதி அமைந்துள்ள சாமி தோப்பிற்கு அய்யா வழி பக்தர்களின் பேரணி மற்றும் வாகன பவனி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான அய்யா வழி பக்தர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
அய்யா வைகுண்டரின் தலைமை பதி கன்னியாகுமரி மாவட்டம் சாமி தோப்பில் அமைந்து உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த தலைமை பதியில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாவான அவதார தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் அய்யா வைகுண்டரின் 191 வது அவதார தினம் இன்று (மார்ச்.4) வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி, நாகர்கோவில் உள்ள நாகராஜா கோயில் திடலில் இருந்து பிரம்மாண்டமான ஊர்வலம் சாமி தோப்பில் அமைந்துள்ள தலைமை பதிக்கு புறபட்டு சென்றது. முன்னதாக, நேற்று விழாவின் தொடக்கமாக சாமி தோப்பு தலைமை பதியில் இருந்து 'வைகுண்ட தீபம்' ஏற்றப்பட்டு அதனைக் கொண்டு சென்று ஆதலவிளை மாமலையில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியோடு அவதார தின விழா தொடங்கியது.
அதே நேரத்தில், திருவனந்தபுரத்தில் இருந்தும் திருச்செந்தூரிலிருந்து புறப்பட்ட வாகன பேரணிகள் நேற்று இரவு நாகராஜா கோயில் திடலில் வந்தடைந்தன. இதே போன்று, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வாகனப் பேரணிகளும் நாகராஜா கோயில் திடலுக்கு நேற்று இரவு வந்து சேர்ந்தன.
விடிய விடிய நாகராஜா கோயில் திடலில் அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு மாசி மாநாடு நடைபெற்றது. இன்று அதிகாலையில் நாகராஜர் கோயில் திடலிருந்து செண்டை மேளம் முழங்க கோலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களை ஆடிப்பாடி அய்யா வழி பக்தர்கள் பேரணியாக புறப்பட்டனர்.
அய்யா வழி பக்தர்கள் பேரணி கோட்டார், சுசீந்திரம், வழுக்கம்பாறை, வடக்கு தாமரை குளம் வழியாக தலைமை பதி அமைந்துள்ள சாமி தோப்பிற்கு சென்றடைந்தது. பகல் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தருகின்ற அய்யா வழி பக்தர்கள் தலைமை பதியில் வந்து வழிபாடுகளில் ஈடுபடுவர்.
இதனைத் தொடர்ந்து, இன்று இரவு வாகன பவனி மற்றும் அய்யாவழி மாநாடோடு அவதார தின விழா நிறைவு பெறுகிறது. இந்த பிரம்மாண்ட பேரணியில் கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இந்த விழாவினை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்பு வரை அவதார தின பேரணி செல்வதால் நாகர்கோவில் இருந்து கன்னியாகுமரி மார்கமாக செல்லும் வாகன போக்குவரத்து அனைத்தும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
இதையும் படிங்க: நூற்றாண்டு பழமையான காளியம்மன் கோயில் தீமிதித் திருவிழா - பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு!