தூத்துக்குடி: தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் சைட் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. இதை பார்வையிட ஏராளமானோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் 'அயோத்தி' திரைப்பட இயக்குநர் மந்திரமூர்த்தியும் வந்தார்.
அப்போது ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அனவரதநல்லூர் பகுதியில் இருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் ஆதிச்சநல்லூரை பார்வையிட வருகை தந்தனர். பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து இயக்குநர் மந்திரமூர்த்தி ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை பார்வையிட்டார்.
அப்போது எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, தொல்லியல் ஆய்வாளர் எத்தீஸ்குமார் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு தொல்பொருட்கள் குறித்து விளக்கமளித்தனர். அப்போது, அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் வல்லுநர்களின் கூறிய அனைத்து கருத்துக்களையும் தங்களது நோட்டுகளில் குறிப்பு எடுத்துக் கொண்டனர்.
அவர்களோடு ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை பார்வையிட்ட 'அயோத்தி' திரைப்பட இயக்குநர் மந்திரமூர்த்தி கூறுகையில், ஆதிச்சநல்லூர் குறித்து கேள்விப்பட்டு, இன்று ஆதிச்சநல்லூருக்கு வருகை தந்து பார்வையிட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஆதிச்சநல்லூர் மிகவும் ஆச்சரியப்பட வைப்பதாகவும், ஆதிச்சநல்லூரால் தமிழர்களான நாம் அனைவருக்கும் பெருமை எனவும் தெரிவித்தார்.
மேலும், "இந்தியாவிலேயே முதன் முறையாக இங்குதான் சைட் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உடன் இணைந்து அதற்கான பணியில் ஈடுபட்டு உள்ளேன். அடுத்த படமும் சமூகம் சார்ந்த ஒரு விஷயத்தை வைத்தே இயக்க உள்ளேன்" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய இயக்குநர் மந்திரமூர்த்தி, அயோத்தி எப்படி மனிதம்தான் முதன்மை, அதன் பின்னர்தான் மற்றவை எல்லாம் என்று கூறியது போன்று, தான் எடுக்கும் அனைத்து படங்களும் மக்கள் ஏதாவது ஒரு வகையில் பயன் பெறக்கூடிய வகையில்தான் இருக்கும் என தெரிவித்தார்.