தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் முத்துவேல். இவர் பாலிமர் தொலைக்காட்சியின் செய்தியாளராக ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் மீது, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கந்துவட்டி புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரின் அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் பாலிமர் செய்தியாளர் முத்துவேல், அந்தச் செய்தியை சேகரித்து அனுப்பினார், அது பாலிமர் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், கூலிப்படையைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் நேற்றிரவு 9 மணியளவில் அலுவலகத்திலிருந்த முத்துவேலை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த முத்துவேல் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செய்தி வெளியிட்டதால் ஆத்திரமடைந்த தட்டார்மடம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன்தான் தன்னை கூலிப்படையை ஏவி வெட்டியதாக செய்தியாளர் முத்துவேல் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் செய்தியாளர் மீது நடத்தப்பட்ட இந்த கொலைவெறித் தாக்குதலுக்கு தமிழ்நாடு முழுவதும் பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இது தொடர்பாக காவல் ஆய்வாளர் கஜேந்திரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் அடுத்த கட்டமாக போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.