தூத்துக்குடி: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பெய்த கனமழையால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவு பாதிக்கப்பட்டு இருந்தது. மேலும், தாழ்வானப் பகுதிகளில் சிக்கிக் கொண்ட பொதுமக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும், மழைநீர் அதிக அளவில் தேங்கியுள்ள பகுதிகளில், மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் பணியில், மாநகராட்சி நிர்வாகமும், சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, தமிழகத்தின் பல்வேறு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், சென்னையில் மழைநீரில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவும் வகையில், நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சார்பில், சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற, 10 ராட்சத மின்மோட்டார்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு, மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மிக்ஜாமுக்கு முன் - மிக்ஜாமுக்கு பின் - சென்னை கண்ட மாற்றங்கள்! 4 நாட்களுக்கு பின் மீண்டெழும் மாநகரம்!
மேலும், தண்டையார்பேட்டை பகுதியில் தேங்கிய மழைநீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சார்பில், சுமார் 5 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பிலான அரிசி, பருப்பு, எண்ணெய், போர்வை, துண்டு, தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிவாரணப் பொருட்கள் அனைத்தும் ஏற்றப்பட்ட லாரியை, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் கொடியசைத்து அனுப்பி வைத்தனர். முன்னதாக பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் சார்பாக வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி லாரி மூலம் அனுப்பி வைத்தார்.
இதையும் படிங்க: சென்னையில் மழைநீர் வெளியேற்றும் பணி எப்படி இருக்கிறது - அமைச்சர் கே.என்.நேரு கள ஆய்வு!