தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 32). இவருக்கு திருமணமாகி, தமயந்தி என்ற மனைவியும், கன்னிகா (7), வைஷ்ணவி (4), பிரதீப் குமார்(1) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.
ராணுவத்தில் நாயக் பொறுப்பில் பணியாற்றிவந்த கருப்பசாமி, காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் பணியிலிருந்தபோது அப்பகுதியிலுள்ள பனிமலையில் நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்தார். இதனால் கருப்பசாமியின் குடும்பத்தினர் மற்றும் திட்டங்குளம் மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் உடல் அவரது சொந்த ஊரான திட்டங்குளம் கிராமத்துக்கு இன்று (நவம்பர் 22) கொண்டு வரப்பட்டு, ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இதில், தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
ராணுவ வீரரின் மனைவி தமயந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், "எனது மாமா நாட்டுக்காக உயிரிழந்தார். அவரை உரிய மரியாதையுடன் வீரமாக வழியனுப்பி வைத்துள்ளேன்.
விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த நேரத்தில்கூட 'நான் ராணுவ வீரன் ஓய்வுக்காக தான் சொந்த ஊர் வந்துள்ளேன். உனக்கு வேலை செய்வதற்காக அல்ல' கர்வத்தோடு கூறுவார். நான் அழுவதுகூட அவருக்கு பிடிக்காது. எனவேதான் அவருடைய மரணத்திற்கு நான் அழவில்லை. எனது உறவினர்களையும் அழவேண்டாம் என கூறினேன்" என்றார்.
அவருடைய மகள் கன்னிகா கூறுகையில், "எனது அப்பா விடுமுறைக்கு வீட்டுக்கு வரும்போது ராணுவ பயிற்சி குறித்து எனக்கு சொல்லி தருவார். தினமும் காலையில் நானும், அப்பாவும் நடைபயிற்சி மேற்கொள்வோம். அப்பாவுக்கு புல்லட் மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டும் என ஆசை உண்டு. கண்டிப்பாக அப்பாவுக்காக புல்லட் மோட்டார் சைக்கிள் வாங்குவோம்" என்றார்.
இதையும் படிங்க: அடுப்படியில்கூட மீத்தேன் எடுக்க அனுமதியளித்தவர் ஸ்டாலின்; ஓ.எஸ்.மணியன் தாக்கு