தூத்துக்குடி மாவட்டத்தில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து வார விழா செப்டம்பர் மாதம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், போஷன் அபியான் திட்டத்தின் கீழ் 'போஷன் மா' நிகழ்ச்சியானது இந்த மாதம் முழுவதும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில் ஆயிரத்து 505 அங்கன்வாடி மையங்களிலும் கொண்டாடப்படுகிறது என்றார். குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் ஆயிரம் நாட்களுக்கு சிறந்த ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்றும் ரத்தசோகை, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் தாக்கத்திலிருந்து முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இது குறித்து தாய்மார்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்டம் முழுவதும் மகளிர் திட்டம், கல்வித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, சுகாதாரத் துறை, வேளாண்மை துறை ஆகியவற்றின் மூலமாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய ஆட்சியர், பாபநாசம், மணிமுத்தாறு அணைகளிலிருந்து தூத்துக்குடி மாவட்ட பயிர் பாசனத்துக்காக ஏற்கனவே ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுவரும் நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக நீர் திறப்பதற்கு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
அதன்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்பேரில் நேற்று முதல் அக்டோபர் 4ஆம் தேதிவரை அணையிலிருந்து தண்ணீர் திறப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்தும், இரண்டாயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறப்பதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பொது இடங்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக பேனர்கள், கட்அவுட்டுகள் வைக்கப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்த ஆட்சியர், மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 135 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது என்றார்.
மேலும் பேனர் அச்சடித்த நிறுவனம் மற்றும் பேனர் வைத்த நபர் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொது நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு பேனர்கள், கட்அவுட் வைக்க காவல் துறையிடம் தடையில்லா சான்றிதழ் பெற்று மாவட்ட ஆட்சியரிடம் முறையாக அனுமதிபெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலை அரசாணையின்படி முழுவதுமாக மூடப்பட்டுள்ளதாகவும், அதனுள் இருக்கும் ஜிப்சம், பாறை பாஸ்பேட்டுகள் உள்ளிட்டவை முழுமையாக அரசு உத்தரவின்படி அகற்றப்பட்டுவிட்டதாகவும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார். ஆலையை பராமரிப்பது தொடர்பான முடிவுகளை அரசு மட்டுமே எடுக்க முடியும் என்றும் சார் ஆட்சியர் தலைமையின் கீழ் உள்ள குழுவினர் ஆலையில் மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு நடத்தி அங்குள்ள பசுமை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைக்கும் ரசாயனங்கள் உள்ளதா என ஆய்வு செய்து அதனை கண்காணிப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக குளங்களை தூர்வாரும் பணி முடிவடையும் என்றும் ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.