தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளான வடக்கு இலந்தைகுளம், வடக்கு திட்டங்குளம், இளம்புவனம் ஆகிய கிராமங்களில் தேவரின் 113ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அன்னதான நிகழ்ச்சியையும் அமைச்சர் தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டு, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கையோ, ஆலோசனையோ வழங்கவில்லை. ஆளுநரின் முடிவென்பது தாமதமாகும் நிலையில், தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களின் நலன்கருதி 7.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக அரசாணை வெளியிட்டது. இதனால், ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைத்து விடக்கூடாது என மு.க.ஸ்டாலின் குறை சொல்கிறார்.
தமிழ்நாட்டில் 1970-க்கு பிறகு நடிகர் சிவாஜி கணேசன், சத்யராஜ், டி. ராஜேந்தர், தேமுதிக உள்ளிட்ட பல கட்சிகள் வந்துள்ளன. அதே வரிசையில்தான் தற்போது கமல்ஹாசன் வந்துள்ளார். எத்தனை கட்சிகள் வந்தாலும் எத்தனை போட்டிகள் வந்தாலும் வெல்லப்போவது அதிமுகதான். தமிழ்நாட்டில் அதிமுக திமுகவுக்கு இடையேதான் போட்டி'' என்றார்.
இதையும் படிங்க: 7.5% இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல்: கவுன்சிலிங் தேதி விரைவில் வெளியாகும்